சிறைச் சாவு வழக்கு விசாரணையில் நேர்மை மிக முக்கியம்- பாண்டியன் வழக்கை முன்னெடுத்த பி.யூ.சி.எல் சுரேஷ் கருத்து

மனித உரிமைகள் அதிகம் மீறப்படும் இடங்களில் முக்கியமானது காவல் நிலையம். விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவோர் மர்மமாக இறப்பதாக வரும் புகார்களுக்கும் இங்கு குறைவில்லை. நம் நாட்டில் சிறைச் சாவுகள் பற்றிய‌ விசாரணைகள் பெரும்பாலும் தோல்வியையே சந்திக்கும் நிலையில், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காவல்துறையைச் சார்ந்தவர்களையே கைதுக்கு உள்ளாக்கி மனித உரிமைக்குப் புது வெளிச்சம் பாய்ச்சியுள்ளது பாண்டியன் வழக்கு.

இந்த வழக்கை 1995-ம் ஆண்டு முதல் நீதிமன்றங்களில் பொறுப்பேற்று நடத்திவந்த பெருமை மக்கள் சிவில் உரிமைக் கழகத்தையே (பி.யூ.சி.எல்.) சாரும். இந்த அமைப்பின் தேசிய பொதுச் செயலாளரும் வழக்கறிஞருமான சுரேஷ், சிறைச் சாவுகளின்போது மனித உரிமை ஆர்வலர்கள், பொதுமக்கள் கவனிக்க வேண்டிய விஷயங்களை ‘தி இந்து’வுடன் பகிர்ந்து கொள்கிறார்..

சிறைச் சாவுகளில் இந்தியாவின் நிலை

காவல் துறையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் ஒருவர் காவல் நிலையத்தில் காவலர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி இறந்தால், அதை சிறைச் சாவு எனலாம். ‘சித்ரவதைக்கு எதிரான உடன்படிக்கை’ ஒன்றை ஐ.நா. சபை 1984-ல் ஏற்படுத்தியது. அதில் இந்தியா இன்னும் கையெழுத்திடவில்லை. இதை வைத்தே சிறைச் சாவுகளின் விசாரணையில் இந்தியாவின் நிலையைப் புரிந்துகொள்ளலாம்.

பிரேதப் பரிசோதனை அறிக்கை

சிறைச் சாவுகளை நீதிமன் றத்துக்கு எடுத்துச் செல்லும்போது மிக முக்கியமாகத் தேவைப் படும் ஆவணம், பிரேதப் பரிசோதனை அறிக்கை. பெரும்பாலான சிறைச் சாவு வழக்குகளில் உள்ளூர் காவல் நிலையம், உள்ளூர் மாஜிஸ்திரேட், உள்ளூர் மருத்துவமனை ஆகிய மூன்று தரப்பும் ஒருவருக்கொருவர் அனுசரித்தே நடந்துகொள்வார்கள். ஆனால் பாண்டியன் வழக்கில், பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர் நேர்மையாக நடந்துகொண்டதால், பாண்டியன் உடலில் இருந்த காயங்கள் பற்றி குறிப்பிட்டிருந்தார். ‘அக்காயங்கள் அவர் இறப்பதற்கு முன்பே ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. அடிபட்டதாலேயே இறந் திருக்கிறார்’ என்பதைக் குறிப்பிட்டிருந்தார். அந்த அறிக்கைதான் வழக்கில் வலிமையான ஆதாரம்.

கோர்வையாகப் பதிவு செய்தல்

அதிர்ஷ்டவசமாக, பாண்டியன் இறந்ததும், மனித உரிமை ஆர்வலர் மூலமாக பாண்டியனின் மனைவி அஞ்சலை பி.யூ.சி.எல். அமைப்புக்கு வந்தார். அவரால் எதையும் கோர்வையாகச் சொல்ல முடியவில்லை. அவரை நிதானப்படுத்தி பல நாட்கள் பேச வைத்து சம்பவங்களைக் கோர்வையாக்கினோம். சம்ப‌வங்களைக் கோர்வையாகப் பதிவு செய்யாமல் (reconstruction of sequence of the events) வழக்கை முன்னெடுப்பது வழக்கின் தோல்விக்கு வழிவகுக்கும்.

உள்ளூர்வாசிகளின் வாக்குமூலம்

இயற்கைக்கு மாறான மரணங்களின்போது, உள்ளூர்வாசிகளிடம் மரணத்துக்கான காரணத்தைக் கேட்டு சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். பெரும்பாலும் இவரும் காவல்துறைக்கு ஆதரவாகவே அறிக்கை அளிப்பார். பாண்டியன் வழக்கிலும் இதுதான் நடந்தது. பிறகு, எங்கள் அமைப்பினரே நேரில் சென்று சில உள்ளூர்வாசிகளிடமிருந்து வாக்குமூலங்களைப் பெற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்தோம். அது வழக்குக்குப் பலமாக இருந்தது.

ஆவணங்களைப் பத்திரப்படுத்துதல்

சுமார் 20 வருட காலமும், வழக்கு தொடர்பான எந்த ஓர் ஆவணமும் தொலைந்துபோகாமல், சேதமடையாமல் பாதுகாப்பது இயலாத காரியம். ஒரு கட்டத்தில் அஞ்சலையே மனம் வெறுத்து ஒதுங்கிவிட்டார். எங்களால் அவரைத் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. எல்லா ஆவணங்களையும் பாதுகாப்பாக வைத்து எங்கள் அமைப்பினர் போராடியதால் தற்போது வெற்றி கிடைத்துள்ளது.

இழப்பீடு அளிப்பதிலும் தாமதம்

பாதிக்கப்பட்ட அஞ்சலைக்கு ரூ.5 லட்சம் அரசு தர வேண்டும் என்று நீதிமன்றம் 2013-ல் உத்தரவிட்டது. அதை அரசு வழங்கவில்லை. 3 முறை நினைவூட்டியும் இழப்பீடு வழங்கப்படவில்லை. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்போகிறோம் என்று தெரிந்த பிறகுதான், இழப்பீடு வழங்கினர்.

சிறைச் சாவு வழக்குகளின்போது சட்டத்தின்படி நடக்க வேண்டிய போலீஸார், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். நிர்வாக ரீதியான தாமதம் என்று அவர்கள் சொன்னால் அது முற்றிலும் பொய். சிறைச் சாவு விசாரணைகளில் ஈடுபடும் ஒவ்வொருவரும் நேர்மையாக இருந்தால் மட்டுமே நீதி கிடைக்கும்.

இவ்வாறு சுரேஷ் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்