மணல் குவாரி ரத்தாகும் வரை போராட்டம் தொடரும்: கோயிலில் தஞ்சமடைந்த களத்தூர் கிராம மக்கள் திட்டவட்டம்

மணல் குவாரிக்கு எதிராக போராட் டத்தில் ஈடுபட்டுள்ள களத்தூர் பகுதி பொதுமக்கள் கோயிலில் தஞ்சமடைந்துள்ளனர். மணல் குவாரி அமைக்கும் முடிவு ரத்தாகும் வரை தங்களது போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் காவேரிப் பாக்கம் அடுத்துள்ள களத்தூர் பகுதியில் உள்ள பாலாற்றில் மணல் குவாரி அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மணல் குவாரிக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால், களத்தூர் அடுத்துள்ள சங்கரன்பாடி என்ற கிராமத்தில் மணல் குவாரி அமைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சங்கரன்பாடி கிராமத்தில் மணல் அள்ள ஆரம்பித்தால் அது களத்தூர் கிராமத்தில்தான் முடியும். மணல் அள்ள அனுமதித்தால் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, இந்த பகுதியில் மணல் குவாரி அமைக்கக் கூடாது எனக் கூறி பொதுமக்கள் தொடர்ந்து போராட் டத்தில் ஈடுபடுகின்றனர்.

ஆதரவுக்கு பண உதவி

இதற்கிடையில், மணல் குவா ரிக்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு மட்டும் குவாரி நிர்வாகம் சார்பில் தொடர்ந்து பண உதவி செய்வதாக கூறப்படுகிறது. மேலும், குவாரிக்கு எதிராக போராடுபவர்களை தாக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாக கூறப்படுகிறது. மணல் குவாரி அமைக்க உள்ளவர்களுக்கு ஆதரவாக மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் செயல்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின் றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட 19 பேரை விடுவிக்கக்கோரி களத்தூர் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் வியாழக்கிழமை இரவு வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அவர் களை கைது செய்த போலீஸார் நள்ளிரவில் களத்தூர் கிராமத்தில் அவர்களை இறக்கிவிடச் சென்றனர்.

அப்போது, போலீஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதில், காவலர் ஒருவர் காயமடைந்தார். காவல் துறை ஜீப் சேதமடைந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களை போலீஸார் தடியடி நடத்தி விரட்டினர். இந்த பிரச்சினை தொடர்பாக 16 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கோயிலில் தஞ்சம்

போலீஸாருக்கு பயந்து பெரும் பாலான ஆண்கள் கிராமத்தைவிட்டு வெளியேறிவிட்டனர். எஞ்சிய பொதுமக்கள் மட்டும் களத்தூர் பஜனை கோயிலில் தஞ்சமடைந் துள்ளனர். அவர்கள் அங்கேயே சமைத்து சாப்பிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் வன்னியரசு சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘களத்தூர் பகுதியில் மணல் குவாரி அமைக்க மாட்டோம் என மாவட்ட நிர்வாகம் அறிவிக்க வேண்டும். மணல் கொள்ளைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொது மக்களுக்கு விடுதலை சிறுத்தை கட்சி ஆதரவு அளிக்கிறது. இது குறித்து, திருமாவளவனுடன் பேசி விரைவில் பெரிய அளவில் ஆர்ப் பாட்டம் நடத்தப்படும்’’ என்றார்.

போராட்டம் தொடரும்

பொதுமக்கள் கூறும்போது, ‘‘சங்கரன்பாடியில் இருந்து களத்தூர் வரை மணல் குவாரி அமைக்க மாட்டோம் என்று எழுத்துப்பூர்வமாக ஆட்சியர் பதில் கொடுக்க வேண்டும். அதுவரை நாங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம். மணல் குவாரி அமைக்க உள்ளவர்கள் வீடு வீடாக ரூ.10 ஆயிரம் கொடுக்கின்றனர். எங்கள் மீது வழக்கு பதிவு செய்யும் காவல் துறை அதிகாரிகள், பணம் கொடுத்தவர்கள் மீது புகார் கொடுத்தால் ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை’’ என்றனர்.

இதுகுறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமாரி கூறும்போது, ‘‘மணல் குவாரிக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் அளவுக்கு நடந்துகொள்கிறார்கள். மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுக்க வருபவர்கள் ஏன் இரவு நேரத்தில் வேலூருக்கு வரவேண்டும்? சில அமைப்புகள் பெண்களை முன்னிறுத்தி போராட்டம் நடத்துகிறார்கள்’’ என்றார்.

‘பொய் வழக்கு போடக் கூடாது’

களத்தூர் விவகாரம் தொடர்பாக பியூசிஎல் அமைப்பின் தேசிய பொதுச்செயலர் வி.சுரேஷ் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அரக்கோணம் தாலுகா, களத்தூர் கிராம மக்கள் மீது போலீஸார் பொய் வழக்கு பதிவு செய்தனர். இளைஞர்கள், பெண்கள், சிறுவர் என 19 பேரை கைது செய்தனர். இதற்கு நீதி கேட்டு ஜூன் 11-ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் களத்தூர் கிராம மக்கள் குவிந்தனர். இதைத் தொடர்ந்து களத்தூர் கிராமத்தில் போலீஸார் குவிக்கப்பட்டு, பொதுமக்களை பொய் வழக்கில் கைது செய்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு பூண்டி மணல் குவாரிக்கு சென்ற லாரிகளை தடுத்ததற்காக பூவரசு என்பவரை காவேரிபாக்கம் போலீஸார் பொய் வழக்கில் கைது செய்து காவல்நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். பூவரசுவை தாக்கிய வழக்கில், உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் காவேரிபாக்கம் காவல்நிலைய ஆய்வாளர் காண்டீபன், உதவி ஆய்வாளர் மோகன் மற்றும் இதர 3 போலீஸார் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை கைது செய்ய வேண்டும்.

களத்தூரில் மணல் குவாரி அமைக்கக் கூடாது. போராடும் மக்கள் மீது பொய்வழக்கு போடுவதை கைவிட வேண்டும். போட்ட பொய் வழக்குகளை திரும்பப்பெற வேண்டும். காவல்துறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்