முன்னாள் ராணுவத்தினருக்கான ஒரே பதவி, ஒரே ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துக: அன்புமணி ராமதாஸ்

நாட்டைக் காக்க போராடிய முன்னாள் ராணுவத்தினருக்கு நன்றிக் கடன் செலுத்தும் வகையில் ‘ஒரே பதவி.. ஒரே ஊதியம்’ திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்திய பாதுகாப்புப்படைகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற வீரர்களுக்கு ஒரே மாதிரியான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற முன்னாள் ராணுவத்தினரின் 42 ஆண்டு கால கோரிக்கையை ஏற்பதில் மத்திய அரசு தேவையற்ற காலதாமதம் செய்து வருகிறது.

இக்கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 14 ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்திய முன்னாள் படைவீரர்கள் அடுத்த கட்டமாக உண்ணாநிலை உள்ளிட்ட பல்வேறு வடிவங்களிலான போராட்டங்களில் ஈடுபடப்போவதாக அறிவித்திருக்கின்றனர்.

இந்திய ராணுவத்தில் ஒரே நிலையிலான பணியில் ஒரே கால அளவில் பணியாற்றிய வீரர்களுக்கு அவர்கள் கடைசியாக வாங்கிய ஊதியம் எவ்வளவு என்பதைக் கருத்தில் கொள்ளாமல் ஒரே அளவில் ஓய்வூதியம் வழங்குவது தான் ‘ஒரே பதவி.. ஒரே ஊதியம்’ திட்டத்தின் நோக்கம் ஆகும். இது நடைமுறைக்கு ஒத்துவராத திட்டமோ, பேராசை கலந்த கோரிக்கையோ அல்ல.

1973 ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்த திட்டம் தான் இது. மூன்றாவது ஊதியக் குழு ‘ஒரே பதவி.. ஒரே ஊதியம்’ முறைக்கு எதிராக பரிந்துரை வழங்கியதால் இத்திட்டம் 42 ஆண்டுகளுக்கு முன் கைவிடப் பட்டது. அப்போதிலிருந்தே இத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்தும்படி முன்னாள் ராணுவத்தினர் தொடர்ந்து போராடி வந்த நிலையில், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், இக்கோரிக்கை குறித்து அளிக்கப்பட்ட மனுவை ஆய்வு செய்ய பகத்சிங் கோஷியாரி தலைமையிலான மாநிலங்களவைக் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் பரிந்துரையை ஏற்று ‘ஒரே பதவி.. ஒரே ஊதியம்’ திட்டத்தை செயல்படுத்த முந்தைய அரசு ஒப்புக்கொண்ட போதிலும், கடைசி வரை இத்திட்டம் நிறைவேறவில்லை.

கடந்த ஆண்டு நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு பதவியேற்றவுடன் இத்திட்டம் உறுதியாக செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அதன்பின் ஓராண்டுக்கு மேலாகியும் அதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இத்திட்டத்தை செயல்படுத்த 2014-15 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகும் இத்திட்டத்திற்கு செயல் வடிவம் கொடுப்பதற்கு மத்திய அரசு ஏன் தயங்குகிறது? என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

பிரதமரும், பாதுகாப்புத்துறை அமைச்சரும் இத்திட்டம் தொடர்பாக அளித்த வாக்குறுதிகள் எதுவுமே நிறைவேற்றப்படாமல், காற்றில் பறக்கவிடப்பட்டு வருவது நிச்சயமாக நல்ல செயலாக இருக்க முடியாது.

முப்படைகளையும் சேர்ந்த வீரர்கள் தான் நாட்டைக் காக்கிறார்கள். நம்மை பாதுகாக்கும் அவர்களை கவலையின்றி வைத்துக் கொள்ள வேண்டியது நமது கடமையாகும். நாட்டுக்காக கணக்கிலடங்காத தியாகங்களை செய்த படை வீரர்கள் தங்களின் கோரிக்கைகளுக்காக தெருவில் இறங்கி போராடும் நிலையை உருவாக்கும் நாடு நாகரீகமான சமுதாயமாக இருக்க முடியாது. நாட்டின் வலிமைக்கும், வளமைக்கும் வகை செய்பவர்கள் ராணுவத்தினரும், விவசாயிகளும் தான். ஆனால், இந்த இரண்டு பிரிவினரின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற மத்திய அரசு மறுப்பது நன்றியற்ற அணுகுமுறையாகும்.

ஒரு காலத்தில் முப்படைகளில் இணைந்து பணியாற்றுவது கௌரவம் என்ற நிலை இருந்தது. ஆனால், இப்போது அந்த நிலை மாறி விட்டது. ராணுவத்தில் சேர முன்வாருங்கள் என்று எவ்வளவு தான் விளம்பரம் செய்தாலும், போதிய அளவில் ராணுவத்தில் சேர இளைஞர்கள் முன்வருவதில்லை. இதற்குக் காரணம் போர் வீரர்களை நாம் மதிப்புடன் நடத்தாதது தான்.

இந்த நிலையை உணர்ந்து, நாட்டைக் காக்க போராடியவர்களுக்கு நன்றிக் கடன் செலுத்தும் வகையில் ‘ஒரே பதவி.. ஒரே ஊதியம்’ திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, போர்ப்படையினரின் ஊதியம் தொடர்பான விஷயங்களைத் தீர்மானிப்பதற்காக தனி ஆணையத்தை அமைக்க வேண்டும்'' என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்