திருவண்ணாமலை மாவட்டத்தில் 22 இடங்களில் மேகி நூடுல்ஸ் மாதிரிகள் சேகரிப்பு: உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 18 ஊராட்சி ஒன்றியங்கள் என 22 இடங்களில் இருந்து மேகி நூடுல்ஸ் மாதிரிகளை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சேகரித்து சென்னைக்கு அனுப்பியுள்ளனர்.

நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் மேகி நூடுல்ஸில் மோனோசோடியம், குளூட்டாமேட் மற்றும் ஈயம் போன்ற வேதிப் பொருட்கள் அதிக அளவில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, உத்தரபிரதேசம் மற்றும் கேரளாவில் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் மேகி நூடுல்ஸின் மாதிரிகள் சேகரிக்குமாறு உணவு பாதுகாப்புத் துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அழகுராஜன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் கலைஷ்குமார் மற்றும் அதிகாரிகள் நேற்று கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் 2 கடைகளில் இருந்து கலப்பட டீத்தூள் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. மேலும், ரூ.10 ஆயிரம் மதிப்பிலான காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் செய்து அழித்தனர்.

சுகாதாரம் இல்லாமல் உணவு தயாரித்ததாக 2 கடைகளுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். இவர்கள் 3 நாட்களுக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். இல்லை என்றால் வழக்கு பதிவு செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதற்கிடையில், திருவண்ணாமலை சாளகிரியார் தெருவில் உள்ள மாங்காய் மண்டியில் கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில், பழங்கள் எதுவும் பறிமுதல் செய்யவில்லை.

மேலும், திருவண்ணாமலை, செய்யாறு, வந்தவாசி, ஆரணி என 4 நகராட்சி பகுதி மற்றும் 18 ஊராட்சி ஒன்றியங்கள் என மொத்தம் 22 இடங்களில் இருந்து சந்தைகளில் விற்பனை செய்யப்பட்ட மேகி நூடுல்ஸ் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இவற்றை சென்னை கிங் ஆய்வு மையத்துக்கு அதிகாரிகள் நேற்று அனுப்பி வைத்தனர்.

இந்த சோதனை குறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் கலைஷ்குமார் கூறியதாவது:

அரசு உத்தரவின்பேரில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மேகி நூடுல்ஸ் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. ஒவ்வொரு கடையில் இருந்தும் சுமார் 500 கிராம் எடையுள்ள நூடுல்ஸ் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இதன் முடிவுகள் வந்தபிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

திருவண்ணாமலை நகரில் கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் விற்பனை செய்யக்கூடாது என்று கடந்த 1 வாரத்துக்கு முன்பே மாம்பழ மண்டிகளுக்கு நோட்டீஸ் அனுப்பினோம். இன்று (நேற்று) மாம்பழ மண்டியில் நடத்திய திடீர் சோதனையில் கல் வைத்து பழுக்க வைத்த பழங்கள் எதுவும் சிக்கவில்லை என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE