பழநி அருகே 13-ம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட மன்னன் சுந்தரபாண்டியன் ஆட்சிக்கால கல்வெட்டை தொல்லியல் ஆர்வலர்கள் கண்டறிந்துள்ளனர். அந்த கல்வெட்டில் குறிப்பிட்ட 18 நாட்டு வணிகர்கள் சேர்ந்து கட்டிய பிள்ளையார் கோயிலை தற்போது அந்த இடத்தில் காணவில்லை என்பது இந்த கல்வெட்டு மூலம் தெரியவந்துள்ளது.
பழநி அருகே சப்பளநாயக்கன் பட்டியில் மிகப் பழமையான கல்வெட்டு ஒன்று கேட்பாரற்று கிடந்துள்ளது. இதை அப்பகுதி பொதுமக்கள் கண்டு தொல்லியல் ஆய்வாளர்கள் நாராயணமூர்த்திக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, அவரது தலைமையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி இயக்குநர் டாக்டர் தட்சிணாமூர்த்தி, பேராசிரியர்கள் கன்னிமுத்து, ராஜவர்மன், மணிவண்ணன் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் அந்த கல்வெட்டை நேற்று ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி ‘தி இந்து’விடம் நேற்று கூறியதாவது:
இந்த கல்வெட்டு பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியனின் 4-வது ஆட்சி ஆண்டில் (கி.பி.1256) பொறிக்கப்பட்டுள்ளது. சித்திரமொழி பெரிய நாட்டார் எனும் புகழ்பெற்ற வணிகக்குழு வியாபாரிகள் இந்த கல்வெட்டை பொறித்துள்ளனர். இவர்கள் அந்த காலகட்டத்தில் மலேசியா, இந்தோனேஷியா உள்ளிட்ட உலக நாடுகள் முழுவதும் சென்று வணிகம் சென்றுள்ளனர். இந்த வணிகக்குழுவில் 18 நாடுகளை சேர்ந்த வியாபாரிகள் இருந்துள்ளனர். அதனால், இந்த வணிகக்குழு பதினெட்டுபட்டி ராஜ்ஜியத்தில் இருக்கும் பதினெட்டு பூமியைச் சேர்ந்த பதினெட்டு ராஜ்ஜிய வணிகக்குழு என அழைக்கப்பட்டுள்ளது. இவர்கள் உலகம் முழுவதும் சென்று ஊர்ஊராக வணிகம் செய்யும்போது ஒவ்வொரு ஊரிலும் குறிப்பிட்ட சில காலம் தங்கியுள்ளனர். அப்போது அந்த ஊருக்குத் தேவையான கோயில்களை கட்டிக் கொடுத்துள் ளனர். அந்த கோயில்களை கட்டும்போது அந்த ராஜ்ஜியத்தை ஆளும் மன்னனின் பெயரை போட்டு கல்வெட்டுகளைப் பொறித்துள்ளனர்.
இதேபோல் வணிகத்துக்காக மதுரையில் இருந்து ரோமாபுரிக்கு சென்ற பெருவழியில் (ஹைவே) சென்றபோது இந்த சித்திரமொழி பெரிய நாட்டார் வணிகக் குழு சப்பளநாயக்கன்பட்டி பகுதியில் சில காலம் தங்கியிருந்து வணிகம் செய்துள்ளனர். அப்போது இந்த வணிகக்குழுவினர் சப்பளநாயக் கன்பட்டி வைகாவூர் நாட்டுப் பெரிய ஓடை குளம் அருகில் இருக்கும் தேச விநாயகப் பிள்ளையாருக்கு பணம் போட்டு அங்கு ஒரு பிள்ளையார் கோயில் கட்டியுள்ளனர்.
அந்த பிள்ளையாருக்கு அமுதுப்படி, சாத்துப்படி, திருவிளக்குப்படி உள்ளிட்டவற்றை நடத்த உத்தர விட்டு மதுரை மன்னன் சுந்தர பாண்டியன் பெயரை போட்டு இந்த கல்வெட்டை வெட்டிக் கொடுத்துள்ளனர். இந்தக் கொடை போன்றவை சந்திரனும், சூரியனும் உள்ளவரை நடைபெற வேண்டும் என அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இந்த கல்வெட்டை பொறித்த சித்திரமொழி பெரிய நாட்டார் எனும் வணிகக்குழு கி.பி.11-ம் நூற்றாண்டு முதல் கி.பி. 13-ம் நூற்றாண்டு வரை அந்த காலத்தில் தமிழக மன்னர்களிடம் பெரும் செல்வாக்கை பெற்றிருந்துள்ளது. அதனால், இவர்கள் ஒவ்வொரு ஊரில் தங்கி வணிகம் செய்தபோது, அந்த ஊரில் நடைபெறும் பஞ்சாயத்துகளை மேற்கொள்ள மன்னர்கள் உரிமை வழங்கியுள்ளனர். இந்த வணிகக் குழுவின் சின்னமான கலப்பை, சூலம், உடுக்கை ஆகியவற்றை கல்வெட்டில் பொறித்துள்ளனர். கல்வெட்டு குறிப்பிடும் பிள்ளையார் கோயில் தற்போது அங்கு காணப்படவில்லை என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago