பேருந்துகளில் தொடரும் ரேஷன் அரிசி கடத்தல்: 5 மாதங்களில் 88 ஆயிரம் கிலோ பறிமுதல்

By ஆர்.கிருபாகரன்

பொள்ளாச்சியை ஒட்டியுள்ள எல்லையோரப் பகுதிகளிலிருந்து, கேரளத்துக்கு ரேஷன் அரிசி கடத்துவது தொடர்ந்து நடைபெற்று கொண்டே இருக்கிறது. இதில் சமீப காலமாக போலீஸாரின் கெடுபிடி அதிகரித்துள்ளதால், பயணிகள் பேருந்துகள் மூலமாகவும் அதிகளவில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் ஏழை, எளிய மக்களின் உணவுக்காக ரேஷன் அரிசி விலையில்லாப் பொருளாக வழங்கப்படுகிறது. ஆனால், கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இந்த அரிசிக்கு நல்ல விலை கிடைப்பதால், கடத்திச் சென்று கள்ளச்சந்தையில் விற்பதும் அதிகமாகி வருகிறது.

கோவை மாவட்டத்தில் குறிப்பாக பொள்ளாச்சி, வாளையாறு, வேலந்தாவளம் ஆகிய வழிகளில் சரக்கு போக்குவரத்து அதிகளவில் நடக்கிறது. இந்த எல்லை வழிச்சாலைகளில் எந்த அளவுக்கு சரக்கு போக்குவரத்து நடக்கிறதோ, அதே அளவுக்கு சட்டவிரோதமாக பொருட்கள் கடத்துவதும் நடக்கிறது. அதிலும் குறிப்பாக ரேஷன் அரிசி கடத்தலை பலரும் தொழிலாகவே செய்து வருகின்றனர்.

பொள்ளாச்சி உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கட்டுப்பாட்டில் உள்ள வாளையாறு, வேலந்தாவளம், வீரப்பகவுண்டனூர், ஜமீன்காளியாபுரம், வடக்குக்காடு, நடுப்புணி, கோபாலபுரம், மீனாட்சிபுரம், கோவிந்தாபுரம், செமணாம்பதி ஆகிய எல்லை வழிச்சாலைகளில் கடந்த 5 மாதங்களில் (ஜனவரி - மே) மட்டும் ரேஷன் அரிசி கடத்தியதாக 154 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதில் 147 பேர் கைது செய்யப்பட்டு, 116 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசியின் அளவு மட்டும் 88 ஆயிரம் கிலோவைத் தொடுகிறது. தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக 7 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் இந்த ஆண்டு வழக்குப் பதியப்பட்டுள்ளதாக, போலீஸார் தெரிவிக்கின்றனர். அந்த அளவுக்கு பொள்ளாச்சியைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து கேரளத்துக்கு ரேஷன் அரிசி கடத்துவது சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது.

கண்காணிப்பு குறைவு?

வேன், மினி ஆட்டோவில் என நடைபெற்று வந்த அரிசி கடத்தல், கடந்த சில ஆண்டுகளாக இரு சக்கர வாகனத்துக்கு மாறியுள்ளது. போலீஸாரிடம் சிக்கிக் கொண்டால் கூட, பெரிய அளவில் இழப்பு இருக்காது என்பதால் பழைய இரு சக்கர வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், தற்சமயம் பயணிகள் பேருந்துகளில் அரிசி கடத்துபவர்களும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 5 மாதங்களில் பேருந்து, ரயிலில் அரிசி கடத்தியதாக சுமார் 25 வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. பயணிகள் போக்குவரத்தில் போலீஸாரின் கண்காணிப்பு குறைவாக இருப்பதால், அதையே சாதகமாக்கி, கடத்தல் தொழில் படுஜோராக நடக்கிறது. மளிகைப் பொருட்களைப் போல ரேஷன் அரிசி எடுத்துச் செல்லப்படுவதால், அதை சோதனை செய்வதும் சிரமம் என்கின்றனர் பேருந்து நடத்துநர்கள்.

கடும் நடவடிக்கை தேவை

இது குறித்து போலீஸார் கூறும்போது, ‘ரேஷன் அரிசி கடத்துவது சாதாரண செயலாக பார்க்க முடியாது.

இதில் பெரிய அளவில் லாபம் இருப்பதால், பின்னணியில் பெரிய அரசியலும் உள்ளது. அதையெல்லாம் மீறி அரிசி கடத்தலை, உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரும், குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகளும் தடுத்து வருகின்றனர். அரிசி கடத்தல் தொழிலில் வாகனங்களுக்கு வழிகாட்டியாக (பைலட்) பயணிக்க கல்லூரி இளைஞர்கள் கூட பயன்படுத்தப்படுகின்றனர். கடுமையான சட்டங்கள் இல்லாததால் கடத்தலில் ஈடுபடுபவர்கள் சீக்கிரமே வெளியே வந்து விடுகிறார்கள். இதனால் அரிசி கடத்துவதும், கைதாவதும் சாதாரணமாக நடக்கிறது. கடுமையான சட்டங்களும், நடவடிக்கைகளும் இருந்தால் மட்டுமே இதை ஓரளவுக்காவது கட்டுப்படுத்த முடியும்’ என்கின்றனர்.

1.46 லட்சம் கி. அரிசி பறிமுதல்

உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கூறும்போது, ‘கடந்த 2014-ம் ஆண்டில் மட்டும் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில், அரிசி கடத்தல் தொடர்பாக 417 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக 363 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 12 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவாகியுள்ளது. அரிசி கடத்தலில் பயன்படுத்தப்பட்ட 356 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக 1 லட்சத்து 46 ஆயிரத்து 575 கிலோ ரேஷன் அரிசியை போலீஸார் கைப்பற்றி உள்ளனர்’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்