நாற்று நட்டு தண்ணீருக்கு காத்திருக்கும் நிலங்கள்: கார் சாகுபடி அனுமதியில் புறக்கணிப்பு

By ரெ.ஜாய்சன்

கார் சாகுபடிக்கு அனுமதி அளித்ததில் தூத்துக்குடி மாவட்டம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். நாற்று நட்டுள்ள நிலையில் தண்ணீருக்காக பல நூறு ஏக்கர் நிலங்கள் காத்திருக்கின்றன.

தாமிரவருணி பாசனத்தில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 86,107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 46,107 ஏக்கரும் பயன்பெறுகின்றன.

தண்ணீர் திறப்பு

தாமிரவருணி பாசனத்தை பொறுத்தவரை முன்கார், கார், பிசானம் என மூன்று பருவமுறை கடைபிடிக்கப்படுகிறது. இதில் கார் சாகுபடிக்காக பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து கடந்த 16-ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் மொத்தம் 86,107 ஏக்கர் நிலங்கள் இருந்த போதிலும், 37,435 ஏக்கருக்கு மட்டுமே கார் சாகுபடிக்கு அனுமதி அளித்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் வெறும் 7,619.8 ஏக்கருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது இம்மாவட்ட விவசாயிகளை அதிருப்தியடையச் செய்துள்ளது.

29,815 ஏக்கருக்கு அனுமதி

தூத்துக்குடி மாவட்ட தாமிரவருணி நதிநீர் பாதுகாப்பு பேரவை அமைப்பாளர் எஸ்.நயினார் குலசேகரன் கூறும்போது, ‘தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களுக்கு சேர்த்து 37,435 ஏக்கருக்கு மட்டுமே கார் சாகுபடிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த வடக்கு, தெற்கு கோடை மேலழகியான் கால்வாய், நதியுன்னி கால்வாய், கன்னடியன் கால்வாய் ஆகிய நான்கு கால்வாய்களின் கீழ் உள்ள நேரடி பாசனம் மற்றும் குளத்து பாசனம் முழுவதும் அடங்கிய 18,090 ஏக்கருக்கும் கார் சாகுபடி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பாளையங் கால்வாய் பாசனத்தில் 6,200 ஏக்கர், கோடகன் கால்வாய் பாசனத்தில் 3,000 ஏக்கர், திருநெல்வேலி கால்வாயில் 2,525 ஏக்கருக்கு கார் சாகுபடிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 37,435 ஏக்கரில் திருநெல்வேலி மாவட்டத்துக்கு மட்டும் 29,815 ஏக்கருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி புறக்கணிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மேலக்காலில் 4,231.71 ஏக்கர், கீழக்காலில் 2,574.46 ஏக்கர், திருவைகுண்டம் தென்காலில் 421.71 ஏக்கர், வடகாலில் 391.92 ஏக்கர் என, மொத்தம் 7,619.8 ஏக்கருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தூத்துக்குடி மாவட்டம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

இந்த குறையை போக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் முன்கார் சாகுபடிக்கு அனுமதி அளிக்கப்பட்ட பகுதி தவிர மீதமுள்ள சுமார் 20 ஆயிரம் ஏக்கருக்கும் கார் சாகுபடிக்கு அனுமதி அளித்து, கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும்’ என்றார் அவர்.

திமுக வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டத்தில் கார் சாகுபடிக்கு கூடுதல் தண்ணீர் திறந்து விவசாய பயிர்களை காப்பாற்ற வேண்டும் என, திமுக கோரிக்கை விடுத்துள்ளது. அக்கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் என். பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:

தூத்துக்குடி மாவட்டத்தில் கார் சாகுபடிக்கு அனுமதிக்கப்பட்டு பாபநாசம் அணையில் இருந்து தினசரி 1500 கன அடி வீதம் 143 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என்ற உத்தரவாதத்தின் பேரில் சாகுபடி பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

ஆனால் தற்போது திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவோ 1050 கன அடிதான். அதிலும் 500 கன அடி தண்ணீர் தொழிற்சாலைகளுக்கு போக மீதி 550 கன அடி தண்ணீர் தான் விவசாயத்துக்கு வருகிறது.

இதனால் திருவைகுண்டம் வடகால், தென்கால் பாசன விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தண்ணீர் செல்லும் கால்வாய்கள் அனைத்தும் செடி கொடிகள் சூழந்தும், மரக்கிளைகள் விழுந்தும் மணல்மேடாகி தண்ணீர் செல்லாத சூழல் உள்ளது.

இதனால் கடைசி குளமான கோரம்பள்ளம் குளம் வரை தண்ணீர் வருவது கஷ்டம். எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் கார் சாகுபடி விவசாயத்தை காப்பாற்றிட பாபநாசம் அணையில் இருந்து 1,500 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்