மீண்டும் நில அவசரச் சட்டத்தை பிறப்பித்தல் நாடாளுமன்றத்தை அவமதிக்கும் செயல்: ராமதாஸ்

நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த முன்வரைவு நாடாளுமன்ற கூட்டு நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அவசரச்சட்டத்தை பிறப்பிப்பது நாடாளுமன்றத்தை அவமதிக்கும் செயல் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நிலம் கையகப்படுத்துதல் அவசர சட்டத்தை 3-ஆவது முறையாக பிறப்பிக்க குடியரசுத் தலைவருக்கு மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்திருக்கிறது. இப்பிரச்சினையில் மக்களின் உணர்வுகளை மதிக்காமல் மீண்டும், மீண்டும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பிப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் கடந்த 2013 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட 'நிலம் கையகப்படுத்துதலில் வெளிப்படைத் தன்மை - நியாயமான இழப்பீடு பெறும் உரிமை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்தல் சட்டத்துக்கு' மாற்றாக புதிய சட்டத்தைக் கொண்டு வருவதற்காக நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை.

நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்காக கடந்த திசம்பர் மாதத்தில் முதல் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அதற்கு மாற்றான சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட போதிலும்,மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாததால் காலாவதியானது.

இதையடுத்து கடந்த ஏப்ரல் முதல் வாரத்தில் இரண்டாவது அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அதற்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற கூட்டு நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருப்பதால், இரண்டாவது அவசர சட்டமும் ஜூன் 4 ஆம் தேதி காலாவதியாகிறது. இதைக் கருத்தில் கொண்டு தான் மூன்றாவது அவசரச் சட்டத்தை பிறப்பிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.

நிலம் கையகப்படுத்துதல் சட்டம் நடைமுறைக்கு வந்தால் விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்களை எந்த எதிர்ப்பும் இல்லாமல் கையகப்படுத்தி பெரு நிறுவனங்களுக்கு தாரை வார்க்க முடியும். அதனால் தான் மிகவும் ஆபத்தான இந்த சட்டத்தை அனைவரும் எதிர்க்கிறார்கள்.

இது தொடர்பான மக்களின் உணர்வுகளை சற்றும் மதிக்காக மத்திய அரசு மீண்டும், மீண்டும் அவசர சட்டங்களைக் கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது. நிலம் கையகப்படுத்துதல் அவசர சட்டம் மூன்றாவது முறையாக பிறப்பிக்கப் படவிருப்பது குறித்து ஊடகங்களுக்கு நேர்காணல் அளித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, "வேகமாக மாறி வரும் உலகில் விவசாயிகளுக்கு பாசனக் கால்வாய்கள் தேவை; விளைபொருட்களை கொண்டு செல்ல சாலைகள் தேவை; பள்ளிகள், மருத்துவமனைகள், வீடுகள் மற்றும் நவீன வசதிகள் தேவை. இதற்காகத் தான் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம் செய்கிறோம்" என்று கூறியிருக்கிறார்.

விவசாயிகளிடம் நிலங்களைக் கையகப்படுத்தி தொழிற்சாலைகள் அமைக்கப்படும் போது இந்த வசதிகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

ஆனால், இவை வரும் போது விவசாயி உழவு செய்ய நிலம் இருக்காது; குடியிருக்க வீடு இருக்காது என்பதால் உழவனும் அங்கு இருக்க மாட்டான்.

ஆக மொத்தம் கண்களை விற்று சித்திரம் வாங்கு என்பதைத் தான் பிரதமர் மோடி இனிப்பில் தோய்த்து எடுத்த வார்த்தைகளால் வெளிப்படுத்தியிருக்கிறார்.

இரண்டாவது அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட போது, நிலம் கையகப்படுத்துதல் சட்டம் நிறைவேற்றப்பட்டால் 30 கோடி பேருக்கு வேலை கிடைக்கும் என்று பிரதமர் மோடியும், நிதியமைச்சர் ஜெட்லியும் ஆசை காட்டினார்கள். ஆனால், அதற்கு மக்கள் மயங்கவில்லை.

இதையடுத்து புதிய வார்த்தைகளால் உழவர்களுக்கு ஆசை காட்ட அரசு முயல்கிறது. ஆனால், நிலம் எடுப்பு சட்டம் உண்மையில் நிலம் பறிக்கும் சட்டம் என்பதால் மக்கள் ஏமாறமாட்டார்கள்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு சாத்தியமில்லாத ஒரு சட்டத்திற்காக மூன்றாவது முறையாக அவசர சட்டத்தைப் பிறப்பிப்பது ஜனநாயகத்திற்கு எதிரான செயல் ஆகும்.

அதிலும் குறிப்பாக நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த முன்வரைவு நாடாளுமன்ற கூட்டு நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அதன் முடிவுக்காகக் கூட காத்திருக்காமல் அவசரச்சட்டத்தை பிறப்பிப்பது நாடாளுமன்றத்தை அவமதிக்கும் செயல். இதைக் குடியரசுத் தலைவர் அனுமதிக்கக்கூடாது.

2013-14-ஆம் ஆண்டில் 3.4 விழுக்காடாக இருந்த வேளாண்துறை வளர்ச்சி 2014-15-ஆம் ஆண்டில் 0.2 விழுக்காடாக குறைந்து விட்டது. வரும் ஆண்டிலாவது வேளாண்துறை வளர்ச்சியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்காமல், வேளாண்மையை அடியோடு ஒழிப்பதற்கான முயற்சிகளில் அரசு ஈடுபடக் கூடாது.

பிரதமர் நரேந்திர மோடி அளித்துள்ள இன்னொரு நேர்காணலில், "நிலம் கையகப்படுத்துதல் சட்டம் எனக்கு வாழ்வோ, சாவோ பிரச்சினை இல்லை. இந்த விஷயத்தில் எந்த முடிவையும் ஏற்கத் தயாராக இருக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி இதை திறந்த மனதுடன் கூறியிருந்தால், விவசாயிகளின் மனநிலையை அறிந்து, அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் 3&ஆவது அவசரச்சட்டம் பிறப்பிக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்