45 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. நாளை அதிகாலை விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கின்றனர்.
மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு தமிழகம் உள்ளிட்ட நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஏப்ரல் 15-ம் தேதி முதல மே 29-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் மூலம் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டது.
தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் 202 படகுகள், தருவைகுளம் 125, வேம்பார் 30, வீரபாண்டியன்பட்டிணம் 8 உட்பட 365 விசைப்படகுகள் கடந்த 45 நாட்களாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
பராமரிப்பு பணிகள்
இந்த தடை காலத்தை மீனவர்கள் தங்கள் படகுகளை பராமரிக்கும் பணிக்கு பயன்படுத்திக் கொண்டனர். படகு இன்ஜின் பராமரிப்பு, புதிதாக வர்ணம் பூசுதல், வலைகளை சீரமைத்தல், புதிய வலை தயார் செய்தல் போன்ற பணிகளை மீனவர்கள் மேற்கொண்டனர். ரூ. 1 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை செலவு செய்து தங்கள் விசைப்படகுகளை தயார்படுத்தினர்.
பச்சையாக படகுகள்
விசைப்படகுகளுக்கு பச்சை நிறத்தில் வர்ணம் பூச வேண்டும் என்ற அரசின் உத்தரவு காரணமாக பெரும்பாலான விசைப்படகுகள் பச்சை நிறத்துக்கு மாறின. இந்த பணிகள் அனைத்தும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு முடிவடைந்தன. இந்நிலையில் மத்திய அரசின் உத்தரவு காரணமாக மீன்பிடித் தடைக்காலம் 61 நாட்களாக நீட்டிக்கப்படலாம் என்ற அச்சம் மீனவர்களிடம் ஏற்பட்டது.
இன்று முடிவடைகிறது
ஆனால், மத்திய அரசின் உத்தரவை தமிழக அரசு ஏற்கவில்லை. எனவே மீன்பிடித் தடைக்காலம் வழக்கம் போல் 45 நாட்கள் தான் என தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் விளக்கமளித்தனர். இதையடுத்து 45 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. விசைப்படகு மீனவர்கள் 45 நாட்களுக்கு பிறகு நாளை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கின்றனர்.
மீனவர்கள் தங்கள் விசைப்படகுகளை இயக்கி வெள்ளோட்டம் பார்த்தனர். தூத்துக்குடி மீன்பிடி துறைமுக வளாகத்தில் உள்ள புனித அமலோற்பவ மாதா சிற்றாலயத்தில் நேற்று காலை சிறப்பு கூட்டுத்திருப்பலி நடைபெற்றது. கூட்டுத்திருப்பலியில் விசைப் படகு உரிமையாளர்கள், தொழிலாளர் கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அனைத்து விசைப்படகுகளையும் அருட்தந்தையர்கள் ஜெபம் செய்து அர்ச்சித்தனர். பின்னர் சிறப்பு அசன விருந்து நடைபெற்றது. இரவில் மீன்பிடித் துறைமுக வளாகத்தில் அமலோற்பவ மாதா திருவுருவ பவனிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விசைப்படகுகள் தயார்
மேலும், விசைப்படகுகளில் மீனவர்கள் வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை ஏற்றி தயார்படுத்தினர். மேலும், இன்ஜினுக்கு டீசல் நிரப்பியும், கடலுக்கு செல்ல தேவையான டீசலை கேன்களில் வாங்கி வந்து படகுகளில் தயாராக வைத்தனர்.
மீன்களை பதப்படுத்துவதற் கான ஐஸ் பார்கள் மட்டும் இன்று இரவு படகுகளில் ஏற்றப்படவுள்ளன. மற்ற அனைத்து பணிகளும் முடிந்து விசைப்படகுகள் கடலுக்கு செல்ல தயாராக இருப்பதாக தூத்துக்குடி மாவட்ட விசைப்படகு தொழிலாளர் சங்க தலைவர் சி. பார்த்தீபன் தெரிவித்தார்.
நலிவடைந்த தொழில்
அவர் கூறும்போது, `மீன்பிடித் தொழில் கடுமையாக நலிவடைந்து வருகிறது. கடந்த ஆண்டு எதிர்பார்த்த அளவுக்கு தொழில் இல்லை. ஆண்டின் 365 நாட்களில் 120 நாட்கள் தான் விசைப்படகுகள் தொழிலுக்கு சென்றிருக்கும்.
டீசல் விலை உயர்வு காரணமாக கூடுதல் செலவு ஆகிறது. வரும் நாட்களில் டீசல் விலையை மத்திய அரசு மேலும் உயர்த்தாமல் இருக்க வேண்டும்.
நம்பிக்கையோடு செல்கிறோம்
கடந்த 2004-ம் ஆண்டில் சுனாமி ஏற்பட்டதில் இருந்தே பருவநிலை மாற்றம் ஏற்பட்டு மீன்பாடு சரியாக இல்லை. நம்பிக்கையோடு கடலுக்கு செல்ல தயாராகி வருகிறோம். மீனவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும்’ என்றார் அவர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago