பருவ மழையின்போது மலைகளில் இருந்து வெளியேறும் தண்ணீரை தடுப்பணைகள் மூலம் தேக்க திட்டம்: ஆய்வை தொடங்கியது பொதுப்பணித் துறையின் நீர்வளப் பிரிவு

தமிழகத்தில் பருவமழைக் காலங்களில் மலைப் பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீரை தடுப்பணைகள் மூலம் தேக்கும் முயற்சியுடன் பொதுப்பணித் துறையின் நீர்வளப் பிரிவு ஆய்வுகளைத் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் செப்டம்பர் வரையும் வடகிழக்கு பருவமழை அக்டோபர் முதல் டிசம்பர் வரை யும் மழையை அளிக்கிறது. ஆண்டு தோறும் பருவமழைக் காலங்களில் கிடைக்கும் மழைநீரில் குறிப்பிட்ட அளவு வீணாக கடலில் கலக்கிறது.

குறிப்பாக தமிழகத்தின் வற்றாத ஜீவநதியான தாமிரபரணியில் இருந்து ஆண்டுக்கு 4 டிஎம்சி வரையிலும், டெல்டா மாவட்டங் களில் இருந்து 10-க்கும் மேற்பட்ட டிஎம்சியும் வீணாக கடலில் கலப்பதாக கூறப்படுகிறது.

இப்பகுதிகள் மட்டுமின்றி தமிழகத்தின் இதர பல பகுதிக ளிலும் மழைநீரை சேமிக்கும் அமைப்புகள் இல்லாததால் பல டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்து வருகிறது. அதே நேரம் தமிழகத்தின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காக தண்ணீரை திறந்துவிடக்கோரி கர்நாடகம், கேரளம் மற்றும் ஆந்திர மாநிலங் களிடம் கோரிக்கை விடுத்து காத்தி ருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள் ளது.

முல்லைப் பெரியாறு மற்றும் காவிரி நீரைப் பெற நீதிமன்றத்தை நாடி உரிமையை பெற வேண்டிய கட்டாயத்துக்கும் தமிழகம் தள்ளப் பட்டுள்ளது. நதிகள் இணைப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டாலும் அதை செயல்படுத்துவதில் சிக்கல்களும் தொடர்கின்றன. இதற்கிடையில் தமிழக பொதுப்பணித் துறையின் நீர்வளப் பிரிவு தமிழகத்தில் இயற்கை நீர்வள ஆதாரங்களைப் பெருக்கும் முயற்சியில் இறங்கி யுள்ளது. ஏற்கெனவே, தமிழகத் தில் மழைநீரைத் தாங்கி வரும் சில ஆறுகளில் இருந்து நீரை கால்வாய்கள் மூலம் குளங் களுக்கு திருப்பும் முயற்சி நடந்து வருகிறது. அதே நேரம், பருவ மழைக் காலத்தில் மலைகளில் இருந்து அதிகளவில் வெளியேறும் தண்ணீரைத் தேக்கி வைக்க முடியாத நிலை இருந்தது. இதற்கான திட்டத்தை செயல்படுத்த தற்போது நீர்வளத்துறை முயற்சி எடுத்துள்ளது. முதல்கட்டமாக, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங் களில் உள்ள சின்னாறு அணைக் கட்டு பகுதியைச் சுற்றியுள்ள மலைகளில் இருந்து வெளியேறும் தண்ணீரை சேமிக்கத் திட்டமிடப் பட்டுள்ளது.

இது குறித்து நீர்வளப்பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஆண்டுதோறும் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மழை பெய்யும்போது, பஞ்சப்பள்ளி பகுதியில் பெத்தனஹள்ளி மலைப் பகுதியில் இருந்து வெளியேறும் காட்டாற்று வெள்ளம் அங்குள்ள கிராமங்களில் புகுந்து விவசாய நிலங்கள், ஆடு, மாடுகளை அடித்துச் செல்லும். இதனால், அப்பகுதி மக்களுக்கு கோடிக் கணக்கில் நஷ்ட ஈடு வழங்கப் படுகிறது. இந்த நீர் அருகில் உள்ள சின்னாறு அணையில் சேர்ந்து மீண்டும் பெண்ணாறு வழியாக கடலில் கலக்கிறது. இந்த நீரை மலைப் பகுதியிலேயே தடுப்பணைகள் மூலம் தேக்கினால், சேதமும் தவிர்க்கப்படுவதுடன், விவசாயம் மற்றும் குடிநீருக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த முடிவுடன் தற்போது ஆய்வுகளை மேற்கொண்டுள்ளோம். இப்பகுதியில் 10 தடுப்பணைகளை கட்டலாம். ஒரு தடுப்பணைக்கு ரூ.2 கோடி வரை செலவாகும். இத்திட்டப் பகுதிகளில் சிறிதளவு வனத்துறை நிலம் வருகிறது. இதுகுறித்தும் அரசிடம் கோரிக்கை வைக்கப்படும்.

மலைப் பகுதியில் அதிகளவு தண்ணீரை தேக்க முடியும் என்பதால் இத்திட்டத்தை செயல்படுத்த ஆய்வுகள் நடந்து வருகின்றன. திட்ட அறிக்கை தயாரித்து விரைவில் அரசிடம் அளிக்கப்படும். அடுத்ததாக தமிழகத்தின் இதர பகுதிகளிலும் திட்டத்தை செயல்படுத்த ஆய்வுகள் நடக்கின்றன. ஒரு முறை செலவு அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்போது, தொடர்ந்து வரும் நஷ்ட ஈடு தொடர்பான செலவினங்களை தவிர்த்து விட முடியும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE