வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டத்தை கைவிடுக: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டத்தை தேர்தல் ஆணையம் கைவிட வேண்டும்; இல்லாவிட்டால் ஆதார் எண் இணைப்பு கட்டாயமல்ல; விருப்பம் சார்ந்தது என்று அறிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''வாக்காளர் பட்டியலில் ஒருவரின் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இடம் பெற்றிருப்பதை கண்டுபிடித்து நீக்கும் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டிருக்கிறது.

வாக்காளர் பட்டியலை தூய்மைப் படுத்துதல், அதன்மூலம் தேர்தலில் கள்ள ஓட்டை தடுத்தல் ஆகிய தேர்தல் ஆணையத்தின் முயற்சிகள் பாராட்டத்தக்கவையாகும். ஆனால், அதற்காக ஆணையம் கடைபிடிக்கும் அணுகுமுறை வாக்காளர்கள் மத்தியில் தேவையில்லாத குழப்பங்களையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருப்பது வருத்தமளிக்கிறது.

வாக்காளர் பட்டியலில் இரட்டைப் பதிவுகளை நீக்க வசதியாக வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயருடன், ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை இணைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான பணிகள் தமிழகத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்காதவர்களின் வீட்டு வாசலில் சென்னை மாநகராட்சித் தேர்தல் அதிகாரி பெயரில் துண்டறிக்கைகள் ஒட்டப்பட்டு வருகின்றன. அவற்றில், ‘‘உங்களின் ஆதார் விவரங்களைச் சேகரிக்க அதிகாரிகள் வீட்டுக்கு வந்தபோது நீங்கள் இல்லை. எனவே, ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை உள்ளூர் தேர்தல் அதிகாரிகளிடம் உடனடியாக எழுத்து மூலம் தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் வாக்காளர் பட்டியலில் இருந்து உங்கள் பெயர் நீக்கப்படும்’’ என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான அறிவிப்பை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் சில மாதங்களுக்கு முன் வெளியிட்ட போது, வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமல்ல என்றும், விருப்பம் உள்ளவர்கள் மட்டும் ஆதார் எண்ணை இணைத்தால் போதுமானது என்றும் கூறியிருந்தது. ஆனால், இப்போது வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைக்கப்படாவிட்டால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமின்றி, வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைத்தவர்களுக்கு ஆணையம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள தொலைபேசி குறுஞ்செய்தியில், ‘‘ஆதார் எண்ணை நீங்கள் இணைத்துவிட்டதால் இனி வாக்களிப்பதற்காக வாக்காளர் அடையாள அட்டையை கொண்டுவரத் தேவையில்லை’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் தேர்தலில் வாக்களிக்க வேண்டுமானால் ஆதார் எண் கட்டாயம் என்ற நிலையை ஏற்படுத்த மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் முயற்சி செய்வது அம்பலமாகிறது. வாக்காளர்கள் தங்களின் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றவும், உரிமையை நிலைநாட்டவும் நிபந்தனைகளை விதிக்க மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் முயல்வது கண்டனத்திற்குரியதாகும்.

ஆதார் எண் என்பது இந்தியாவில் வசிக்கும் வசிப்பாளர்களுக்கான அடையாள எண் ஆகும். ஆனால், வாக்குரிமை என்பது குடிமக்களுக்கு மட்டும் உள்ள ஒன்றாகும். எனவே, இரண்டையும் இணைத்து குழப்பத்தை ஏற்படுத்த தேர்தல் ஆணையம் முயற்சி செய்யக்கூடாது.

அரசின் நலத்திட்ட பயன்களை பெறுவதற்காக ஆதார் எண் கட்டாயம் என அரசு அறிவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், எந்த சேவை பெறுவதற்கும் ஆதார் கட்டாயமில்லை என்று தீர்ப்பளித்திருக்கிறது. இதற்கு மாறாக வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது நீதிமன்ற அவமதிப்பு ஆகும். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

வாக்காளர் பட்டியலில் ஒருவரின் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்டிருந்தால் அதை கண்டுபிடித்து சரி செய்ய எத்தனையோ வழிகள் உள்ளன. அதை விடுத்து வாக்களிப்பதற்கு ஆதார் எண் அவசியம் என்ற நிலையை ஏற்படுத்த முயல்வதை ஏற்கமுடியாது.

எனவே, வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டத்தை தேர்தல் ஆணையம் கைவிட வேண்டும்; இல்லாவிட்டால் ஆதார் எண் இணைப்பு கட்டாயமல்ல; விருப்பம் சார்ந்தது என்று அறிவிக்க வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

14 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்