சாலை பாதுகாப்பு சட்டம் நிறைவேறினால் ஓட்டுநர் உரிமத்துக்கு ரூ.10 ஆயிரம் செலவாகும்: தொமுச குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

சாலை பாதுகாப்பு சட்டம் 2015-ஐ மத்திய அரசு அமல்படுத்தினால் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு கூட ரூ.10 ஆயிரம் செலவாகும் என்று தொமுச குற்றம்சாட்டி உள்ளது.

மத்திய அரசின் சாலை பாதுகாப்பு சட்டத்தை கைவிடக்கோரி வரும் 30-ம் தேதி நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து 9 தொழிற்சங்கங்கள் சார்பில், திருவண்ணாமலை அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் முன்பு நேற்று வாயிற் கூட்டம் நடைபெற்றது.

தொமுச பேரவைச் செயலாளர் க.சவுந்தரராஜன் தலைமை வகித்தார். அப்போது அவர் கூறும்போது, “மத்திய அரசு சாலை பாதுகாப்பு சட்டத்தை கைவிட வேண்டும். அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், அரசுப் போக்குவரத்து கழகங்கள் இல்லாமல் போய்விடும். வெளிநாட்டு, உள்நாட்டு முதலாளிகள் இணைந்து அனைத்து வழித்தடங்களையும் ஏல அடிப்படையில் இயக்கும் நிலை ஏற்பட்டுவிடும்.

பேருந்து கட்டணம் நிர்ணயம் செய்வது, ஓட்டுநர் உரிமம் வழங்குவது, இருசக்கர வாகனம் முதல் கன ரக வாகனங்கள் வரை அனைத்து வாகனங்களுக்கும் தகுதிச் சான்று பெறுவது ஆகிய அனைத்தும் தனியார் மயமாகிவிடும். போக்குவரத்தில் சட்டம் இயற்றுவது, வரி வசூல் செய்வது உள்ளிட்ட மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்படும். மரண விபத்து ஏற்படுத்தும் ஓட்டுநர்களுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை, ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

ஓட்டுநர் உரிமத்தில் 12 புள்ளிகள் வைத்து சிறிய தவறுக்கு கூட ஓட்டுநர் உரிமம் பறிப்பு, சிறைத் தண்டனை போன்ற கடுமையான தண்டனை விதிக்கப்படும். வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் பயிற்சிப் பள்ளிகள் கார்பரேட் நிறுவனங்கள் வசம் சென்று விடும். ஓட்டுநர் உரிமம் பெற ரூ.10 ஆயிரம் செலவிட வேண்டும். நடத்துநர் என்ற வார்த்தை இருக்காது. சாலை போக்குவரத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் கெடுக்கும் சட்டத்தை கைவிடக்கோரி வரும் 30-ம் தேதி நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்” என்றார்.

சிஐடியு மண்டல பொருளாளர் பாலசுந்தரம், டிஎம்டிஎஸ்பி பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன், எம்எல்எப் பொதுச்செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, ஏஐடியுசி பொருளாளர் விஸ்வநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர். தொமுச அமைப்புச் செயலாளர் துரைசாமி நன்றி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE