வாளையாறு சோதனைச்சாவடி பிரச்சினை: கேரள முதல்வருடன் இன்று பேச்சுவார்த்தை- லாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் ஆகுமா?

வாளையாறு சோதனைச்சாவடி பிரச்சினைக்காக இன்று இரவு கேரள முதல்வர் உம்மன் சாண்டியுடன் நடத்தப்படும் பேச்சு வார்த்தையில், 8 கோரிக்கைகளில் 6 கோரிக்கைகளாவது ஏற்கப்பட வில்லையென்றால், கேரளத்துக்குச் செல்லும் காய்கறி, தானியப்பொருட்கள் உள்ளிட்ட சரக்குகள்கூட அடியோடு நிறுத் தப்படும் என லாரி அதிபர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கோவை அருகே உள்ள கேரள வாளையாறு வணிக வரித்துறைச் சாவடியில் ஆவண, வாகன சோதனைக்காக நாட்கணக்கில் நூற்றுக்கணக்கான சரக்கு லாரிகள் நிறுத்தப்படுவதையும், அதில் டிரைவர்கள், லாரி உரிமை யாளர்கள் கடும் பாதிப்புக்குள்ளா வதையும் கண்டித்து சுமார் 15 ஆண்டுகளாக பல்வேறு போராட் டங்களை நடத்தியுள்ளனர் லாரி உரிமையாளர்கள். அதனை யடுத்து, வாகனங்கள் தேக்கமடை யாமல் இருக்க வசதி வாய்ப்பு களை ஏற்படுத்தும் வண்ணம் 2013-ம் ஆண்டில் முக்கிய 8 கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டது கேரள அரசு.

அதில் ஒன்றுகூட நிறைவேற்றப்படாத நிலையில், கடந்த 1-ம் தேதி பிற மாநிலங்களிலிருந்து வரும் லாரிகள் வாளையாறில் மட்டுமல்லாது, எந்த சோதனைச் சாவடி வழியேயும் கேரளத்துக்குள் செல்லாது என்று போராட்டத்தை அறிவித்தனர். கடந்த 5 நாட்களாக வாளையாறில் சுமார் 600 லாரிகள் உட்பட 1000 லாரிகள் தமிழக எல்லைகளில் தேங்கி நிற்கின்றன. இதனால் கேரள அரசுக்கு வரி வருவாய் தினசரி ரூ.100 கோடி வீதம் ரூ.500 கோடியும், லாரி உரிமையாளர்களுக்கு தினசரி ரூ.60 கோடி வீதம் இதுவரை ரூ.300 கோடியும், கேரளத்திற்குள் செல்லவேண்டிய சரக்குகள் கிட்டத்தட்ட 4 ஆயிரம் கோடியும் தேக்கமாகி இருப்பதாகவும், பல்வேறு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரும் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே கேரள முதல்வர், லாரி உரிமையாளர்களை இன்று இரவு 8 மணிக்கு திருவனந்தபுரத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக் கிறார். அதில் லாரி உரிமையாளர் நிர்வாகிகள் தரப்பில் 14 பேர் கலந்து கொள்ள முடிவெடுத் துள்ளனர். அதேசமயம் இரவு முதல்வர் முன்னிலையில் நடக்கும் பேச்சுவார்த்தையின் போது போராட்டத்தின் தீவிரம் தெரியவேண்டும் என்பதற் காக பொள்ளாச்சி, கிணத்துக் கடவு, வேலந்தாவளம், கவுண்டம் பாளையம், காரமடை, மேட்டுப் பாளையம் பகுதிகளில் இருந்து கேரள வாகனங்கள் வந்தால் காய்கறிகளோ, தானிய வகை களையோ ஏற்ற வேண்டாம். எங்கள் போராட்டத்துக்கு ஒத்துழைப்பு கொடுங்கள் என்று அனைத்து மார்க்கெட்டுகளிலும், லாரி உரிமையாளர்கள் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து ‘தி இந்து’ செய்தி யாளரிடம், கோவை மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் கலியபெருமாள் பேசும்போது, ‘இயந்திரங்கள், பனியன், துணி, முட்டை, கோழி, அரிசி-பருப்பு என கேரளத்துக்குச் செல்ல வேண்டிய பொருட்கள் எல்லாமே தமிழகத்திலேயே தேக்கமாகி இருக்கின்றன. இன்று பேச்சுவார்த்தைக்கு கேரள முதல்வர் அழைத்திருப்பதால் அந்த பேச்சுவார்த்தை முடியும் வரை மார்க்கெட்டுகளில் கேரளத்துக்கு காய்கறிகளைகூட ஏற்றாதீர்கள் என்று கோரிக்கை வைத்து வருகிறோம்.

இன்று நடக்கும் பேச்சு வார்த்தையில் நாங்கள் வைக்கும் 8 கோரிக்கைளில் 6 கோரிக்கைகள் ஏற்கப்பட்டு உடனடியாக செயல்பாட்டுக்கும் வரவேண்டும். இல்லாவிட்டால் கேரளத்துக்கு அங்கொன்றும் இங் கொன்றுமாக வேறு சாவடிகளின் வழியே செல்லும் ஒன்றிரண்டு காய்கறி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வாகனங்கள்கூட செல்லாது’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE