வேளாண் அதிகாரி தற்கொலை விவகாரம்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி உதவியாளர் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம்

திருநெல்வேலி வேளாண்மை அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உதவியாளர் பூவையா சங்கரன்கோவில் நீதிமன்றத்தில் நேற்று ரகசிய வாக்குமூலம் அளித்தார்.

முத்துகுமாரசாமி கடந்த பிப்ரவரி மாதம் 20 ம் தேதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். வேளாண் துறையில் 7 டிரைவர்கள் பணி நியமனத்தில் பணம் கேட்டு மிரட்டி நெருக்கடி கொடுத்ததால் அவர் தற்கொலை செய்தது தெரியவந்தது.

தமிழக வேளாண்மை துறை அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேளாண்மை துறை தலைமைப் பொறியாளர் செந்தில் ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இவர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் திருநெல்வேலி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் கேட்டு செந்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் விரைவில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உதவியாளர் பூவையா, திருநெல் வேலியை சேர்ந்த வேளாண்மை துறை உயர் அதிகாரிகள், ஊழியர் கள், அதிமுக முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத் தப்பட்டிருக்கிறது. இவ்வழக்கில் சம்பந்தப்பட்டவர்களிடம் ரகசிய வாக்குமூலம் பெறுவதற்கு திருநெல்வேலி நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் மனுத்தாக்கல் செய்திருந்தனர். பூவையாவின் வாக்குமூலத்தை ரகசியமாக பதிவு செய்ய சங்கரன்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முரளிதரகண்ணன் முன்னிலையில் அவரை ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டது.

நேற்று பகல் 12.10 மணி முதல் 1.25 மணிவரை சங்கரன்கோவில் குற்றவியல் நீதித்துறை நீதிபதி முன்னிலையில் பூவையா வாக்குமூலம் அளித்தார். நீதிமன்றத்தின் அனைத்து கதவுகளும் மூடப்பட்டு உள்ளே வேறு யாரையும் அனுமதிக்காமல் அவரிடம் ரகசியமாக வாக்குமூலம் பெறப்பட்டது.

முத்துகுமாரசாமி தற்கொலைக்கு காரணமாக என்னென்ன சம்பவங்கள் நடந்தன? யார் யார் எப்போதெல்லாம் மிரட்டி னார்கள்? இந்த வழக்கில் மேலும் யார் யார் சம்பந்தபட்டுள்ளனர்? என்று பல்வேறு விவரங்களையும் அவர் பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.

தொடர்ந்து வேளாண்துறை உயர் அதிகாரிகள், திருநெல்வேலியை சேர்ந்த சில அதிமுக பிரமுகர் களிடமும் ரகசிய வாக்குமூலம் பெறப்பட உள்ளதாக சிபிசிஐடி போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின் றன. இந்த வாக்குமூலங்களின் அடிப்படையில் மேலும் சிலர் கைதாக வாய்ப்பு உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE