இணையதளக் கொள்கை: டிராய் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

இணையதள சேவையில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்க 'டிராய்' முயற்சிப்பதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவரது முகநூலில் பதிவு செய்துள்ள நிலைத்தகவலில், "இந்தியாவில் பல மாற்றங்களுக்கு இணையதளங்கள் பேருதவியாக இருந்து வருகிறது. நாட்டில் உள்ள அனைவரும் தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளவும், பொருளாதார பயன்களை அனுபவிக்கவும் இந்த இணையதளங்கள் மூலம் முதல் முறையாக ஒரு நல்ல வாய்ப்பு கிட்டியிருக்கிறது.

ஆனால் அதிலும் இப்போது மத்திய அரசின் தொலை தொடர்பு துறையின் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அமைப்பு முட்டுக் கட்டைபோட முயற்சிக்கிறது.

இணைய தள சேவையில் தனியார் டெலிகாம் கம்பெனிகளுக்கு முன்னுரிமை கொடுக்க டிராய் அமைப்பு முயற்சிக்கிறது. அப்படி அனுமதிக்கப்பட்டால் பொதுவாகப் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப், யூ டியூப், இணைய தளம் மூலம் தொலை பேசி அழைப்பு உள்ளிட்ட பல அப்ளிகேஷன்களுக்கு அந்த கம்பெனிகள் தனியாக கட்டணம் வசூலிக்கும் நிலைமை உருவாகும்.

இதனால் பெரும் தனியார் நிறுவனங்கள் சிறிய இணைய தள சேவை மையங்களுக்கு இடையூறு செய்தோ அல்லது அவர்களின் இணைய தள சேவையை முடக்கியோ அந்தத் தொழிலை நம்பி வாழும் எண்ணற்ற சிறு தொழில் முனைவோரை கடுமையாக பாதிக்கும் சூழ்நிலையை உருவாக்கலாம்.

அனைத்து இணையதள சேவை மையங்களுக்கும் சம வாய்ப்பு என்ற ரீதியில் தற்போது இருக்கும் இணையதளக் கொள்கைக்கு எதிராக டிராய் அமைப்பின் இந்த முயற்சி இருக்கிறது.

மக்களுக்கு பயன் கிடைப்பதை தடுத்து, தனியார் டெலிகாம் கம்பெனிகளின் லாபத்தை கூட்ட நினைக்கும் டிராய் அமைப்பின் இந்த முயற்சிக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தனியார் டெலிகாம் கம்பெனிகளுக்கு இணைய தள சேவையில் முன்னுரிமை அளிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையை டிராய் அமைப்பு உடனடியாக நிராகரிக்க வேண்டும்.

இணையதள சேவை என்பது சில தனியார் கம்பெனிகளின் கட்டுப்பாட்டிற்குள் மாட்டிக் கொள்ளாமல், நாட்டிற்கும், மக்களுக்கும் பயன்படும் ஒரு நடுநிலையான சேவையாக தொடருவதற்கு வழிவகுக்க வேண்டும் என்று ட்ராய் அமைப்பை நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்" என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE