32.41 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சாதனை

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 2014-15-ம் நிதியாண்டில் 32.41 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 13.17 சதவீதம் அதிகம். இதுகுறித்து தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழக தலைவர் ச.ஆனந்த சந்திரபோஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தூத்துக்குடி வ.உ.சி. துறை முகம் 2014-15-ம் நிதியாண்டில் 32.41 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. இது கடந்த நிதியாண்டில் கையாண்ட 28.64 மில்லியன் டன்களை விட 13.17 சதவீதம் கூடுதலானது. மத்திய கப்பல் துறை அமைச்சகம் நிர்ணயம் செய்த 32.00 மில்லியன் டன்களைவிட 1.28 சதவீதம் கூடுதலாக கையாண்டுள்ளது.

சரக்கு பெட்டகங்களை பொறுத்தவரை 2014-15-ம் நிதியாண்டில் 5,59,727 சரக்கு பெட் டகங்களை கையாண்டுள்ளது. இது கடந்த நிதியாண்டில் கையாண்ட 5,07,735 சரக்கு பெட்டகங்களை விட 10.24 சதவீதம் கூடுதலானது. மத்திய கப்பல் துறை அமைச்சகம் நிர்ணயம் செய்த 5,47,890 சரக்கு பெட்டகங்களைவிட 2.16 சதவீதம் கூடுதலாக கையாண்டுள்ளது.

இறக்குமதியை பொறுத்தவரை யில் 2014-15-ம் நிதியாண்டில் 23.99 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. இது கடந்த நிதியாண்டில் கையாண்ட 20.98 மில்லியன் டன்களைவிட 14.30 சதவீதம் கூடுதலானது. ஏற்றுமதியை பொறுத்தவரை 2014-15-ம் நிதியாண்டில் 8.42 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. இது கடந்த நிதியாண்டில் கையாண்ட 7.67 மில்லியன் டன்களைவிட 9.78 சதவீதம் கூடுதலானது.

இதேபோல் 2014-15-ம் நிதியாண்டில் 8.61 மில்லியன் டன் அனல்மின் கரியை கையாண்டு முந்தைய ஆண்டை விட 29.64 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

தொழிற்சாலை கரியை பொறுத்தவரையில் 5.19 மில்லியன் டன் கையாண்டு 20.32 சதவீதமும், சரக்கு பெட்டக சரக்குகளில் 11.03 மில்லியன் டன் கையாண்டு 8.93 சதவீதமும், தாமிர தாதுவில் 1.21 மில்லியன் டன் கையாளப்பட்டு 30.70 சதவீதம், உர மூலப்பொருட்களில் 1.05 மில்லியன் டன் கையாண்டு 33.29 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE