நெடுஞ்சாலைகளுக்கு அருகில் இருக்கும் 18 அஞ்சல் நிலையங்களில் ஆம்புலன்ஸ் சேவை: விரைவில் அமல்படுத்த திட்டம்

By செய்திப்பிரிவு

நெடுஞ்சாலைகளுக்கு அருகில் உள்ள 18 அஞ்சல் நிலையங்களில் ஆம்புலன்ஸ் சேவையை விரைவில் தொடங்குவதற்கு தமிழக அஞ்சல் துறை திட்ட மிட்டுள்ளது.

குக்கிராமங்களில்கூட இயங்கி வரும் அஞ்சல் துறை, கடிதப் போக்குவரத்து மட்டுமின்றி அஞ்சலக சேமிப்பு, இ-போஸ்ட், மீடியா போஸ்ட், வெளிநாட்டு பண பரிவர்த்தனை, பஸ் மற்றும் ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட சேவைகளையும் வழங்கி வருகிறது. இதன் ஒருகட்டமாக தாம்பரம், புனித தோமையர் மலை, அம்பத்தூர், அண்ணா நகர் ஆகிய 4 அஞ்சல் நிலையங்களில் ஆம்புலன்ஸ் சேவையை அஞ்சல் துறை தொடங்கியது.

இதற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதைத் தொடர்ந்து மேலும் 18 அஞ்சல் நிலையங்களுக்கு ஆம்புலன்ஸ் சேவையை விரிவுபடுத்த அஞ்சல் துறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து சென்னை நகர மண்டல அஞ்சல் துறை அதிகாரி மெர்வின் அலெக்சாண்டர், ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘‘கால மாற்றத்துக்கு ஏற்ப பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகளை அஞ்சல் துறை வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆம்புலன்ஸ் சேவையை தொடங்குவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. ஆம்புலன்ஸ் சேவை வழங்கும் மையங்களுடன் அஞ்சல் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். டிசம்பரில் ஆம்புலன்ஸ் சேவை தொடங் கப்படும்’’ என்றார்.

ஆம்புலன்ஸ் சேவை குறித்து அஞ்சல் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘நெடுஞ்சாலைகளுக்கு அருகில் உள்ள 18 அஞ்சல் நிலையங்களில் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்குவதற்கான வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட அஞ்சல் நிலையங்களில் தனியார் நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். அஞ்சலகங்களை தொடர்பு கொள்பவர்களுக்கு உடனடியாக ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்படும். அதற்கான அனைத்து வசதிகளும் அஞ்சல் நிலையங்களில் செய்து தரப்படும்’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE