தஞ்சை பெரிய கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்: திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்

நூறாண்டுகளுக்குப் பிறகு, வரும் 29-ம் தேதி நடைபெறவுள்ள தஞ்சை பெரிய கோயில் தேரோட்டத்தையொட்டி, புதிய தேர் வெள்ளோட்டம் நேற்று காலை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் உற்சாகத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

தஞ்சை பெரிய கோயிலில் கடந்த 1818-ல், மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோஜி காலத்தில் தேரோட்டம் நடந்துள்ளது. இதற்கான குறிப்புகள் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலக ஆவணங்களில் உள்ளன. பின்னர் தேரோட்டம் நடைபெற்றதற்கான சான்றுகள் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பெரிய கோயிலுக்கு புதிய தேர் உருவாக்கவும், தேரோட்டம் நடத்தவும் 2013-ல் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரைச் சேர்ந்த ஸ்தபதி சி.வரதராஜன் தலைமையிலான குழுவினர், தஞ்சை மேலவீதி கொங்கணேஸ்வரர் கோயில் வளாகத்தில் புதிய தேரை உருவாக்கினர். ரூ.37 லட்சம் செலவில், 16.5 அடி உயரம், 40 டன் எடை, 5 நிலைகளாக உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தேரில், 320 சிற்பங்கள் செதுக் கப்பட்டுள்ளன.

தேரின் முன்புறம் கயிலாயக் காட்சி, பின்புறம் பெரிய கோயில் அமைப்பு, நந்தி மண்டபம் மற்றும் நாயன்மார்கள், சிவ தாண்டவக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தேரைச் சுற்றிலும் 220 வெண்கல மணிகள் பொருத்தப்பட்டுள்ளன.

பெருவுடையார் கோயிலில் கடந்த 15-ம் தேதி சித்திரைப் பெருவிழா தொடங்கியது. வரும் 29-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

இதையொட்டி, புதிய தேர் உருவாக்கும் பணி கடந்த வாரம் முடிவடைந்தது. நேற்று காலை 7 மணிக்கு புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. மேல வீதி காமாட்சி அம்மன் கோயில் எதிரிலிருந்து புறப்பட்ட தேரின் மீது, பெரிய கோயிலில் இருந்து கொண்டுவரப்பட்ட கலசம் வைக்கப்பட்டிருந்தது.

ஏராளமான பக்தர்கள் உற்சாகத்துடன் தேர் இழுத்தனர். வடக்கு வீதி, கீழ வீதி, தெற்கு வீதி வழியாக மீண்டும் மேல வீதியை வந்தடைந்தது.

சோழர் கால பாணியிலான எட்டுப் பட்டை வடிவ அலங்காரத் துணி, துணியாலான தொம்பைகள், மாலைகள், உச்சியில் கும்பம் போன்றவை அமைப்பதற்கான கால்கள், குறுக்குச் சட்டங்களை தேரில் பொருத்தும் பணிகள் நடைபெறவுள்ளன.

தரை முதல் கும்பம் வரை மொத்தம் 40 அடி உயரம், 16 அடி அகலம் கொண்ட இந்தத் தேருக்காக, தலா 1 டன் எடை, 6 அடி உயரம் கொண்ட இரும்புச் சக்கரங்கள் திருச்சி பெல் நிறுவனத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE