கார் சர்வீஸ் சென்டர் உரிமையாளர் கடத்தல்: டாக்டர் உட்பட 6 பேர் கைது

சென்னை பூந்தமல்லி எம்.எஸ்.வி. நகரை சேர்ந்தவர் முருகன். குமணன்சாவடியில் கார் சர்வீஸ் சென்டர் வைத்துள்ளார். பழைய கார்களை வாங்கி விற்கும் தொழிலும் செய்து வருகிறார். நேற்று முன்தினம் மாலையில் முருகனின் மனைவி இந்திராவும் கார் சர்வீஸ் சென்டரில் இருந்தார். அப்போது இளைஞர் ஒருவர் வந்து, சாலை ஓரத்தில் கார் பழுதாகி நிற்பதாகவும் சரி செய்து தருமாறும் முருகனிடம் கூறியுள்ளார்.

இதை நம்பி முருகன் அவருடன் சென்றுள்ளார். காரின் அருகே சென்ற போது திடீரென அதில் இருந்த 3 பேர் முருகனை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றினர். அப்போது முருகன் அபயக்குரல் எழுப்ப, இந்திரா காரை நோக்கி ஓடினார். ஆனால் அந்த கும்பல் முருகனை காரில் கடத்தி சென்றது.

காரின் பதிவு எண்ணை குறித்து வைத்துக்கொண்ட இந்திரா, பூந்த மல்லி போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். கார் பதிவு எண்ணை வைத்து போலீஸார் நடத்திய விசாரணையில், அது நொளம்பூர் பகுதியை சேர்ந்த வெங்கட் என்பவருக்கு சொந்தமான கார் என்பது தெரியவந்தது. போலீஸார் அங்கு சென்று விசாரித்தபோது வெங்கட்டும், அவரது கூட்டாளிகளும் சேர்ந்து முருகனை கடத்தியது தெரிந்தது. வெங்கட் கொடுத்த தகவலின் பேரில் நொளம்பூரில் ஒரு அறையில் அடைத்து வைத்திருந்த முருகனை போலீஸார் மீட்டனர்.

இந்த கடத்தல் சம்பவம் குறித்து போலீஸார் கூறியதாவது:

சேத்துப்பட்டை சேர்ந்த பல் மருத்துவரான ஜெர்ரி என்பவருக்கு சொந்தமான இடத்தில்தான் முருகன் கார் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களாக முருகன் வாடகை கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதில் ஏற்பட்ட பிரச்னையில் ஜெர்ரியின் நண்பர் வெங்கட் கடத்தல் சம்பவத்தில் இறங்கியிருக்கிறார்.

டாக்டர் ஜெர்ரி, வெங்கட், கடத்தலில் ஈடுபட்ட வேலு, அருள், சீனிவாசன், விஜய் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE