முடிவுகளை அறிவிக்க உயர் நீதிமன்றம் தடை: அரசு நர்ஸ்கள் சங்கத் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நிறுத்தம்

முடிவுகளை அறிவிக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதால், தமிழ்நாடு அரசு நர்ஸ்கள் சங்கத் தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணுவதில் தொடர்ந்து இழுபறி நிலை ஏற்பட்டு வருகி றது.

தமிழ்நாடு அரசு நர்ஸ்கள் சங்கத்துக்கு புதிய மாநிலத் தலைவர், செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர்களை தேர்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 18-ம் தேதி நடந்தது. தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் நடந்த தேர்தலில் நர்ஸ்கள் ஆர்வத்துடன் ஓட்டு போட்டனர். தலைவர் பதவிக்கு 4 பேரும், செயலாளர், பொருளாளர் பதவிக்கு தலா 3 பேரும், இரண்டு துணைத் தலைவர் பதவிக்கு 5 பேரும் போட்டியிட்டனர்.

தமிழகம் முழுவதும் பதிவான ஓட்டுகள் பாதுகாப்பாக கொண்டுவரப்பட்டு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள நர்ஸ்கள் விடுதியில் வைக்கப்பட்டது. தேர்தலுக்கு முன்னதாக அருள்முருகன் (ஆண் செவிலியர்) என்பவர் தேர்தல் நடத்த தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். சங்க நிர்வாகிகள் நீதிமன்ற அனுமதியைப் பெற்று தேர்தலை நடத்தினர்.

ஓட்டு எண்ணிக்கையை நேற்று நடத்த திட்டமிட்டிருந்தனர். அதற்காக நீதிமன்ற அனுமதியையும் பெற்றனர். ஆனால், ஓட்டு எண்ணிக்கைக்கு அனுமதி அளித்த நீதிமன்றம், முடிவுகளை வெளியிடக்கூடாது என்று கூறிவிட்டது.

வேட்பாளர்கள் எதிர்ப்பு

நேற்று மாலை 4 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்க இருந்தது. ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஓட்டுகளை எண்ணி முடித்ததும் முடிவுகளை அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஓட்டு எண்ணிக்கை நடத்தக் கூடாது என வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், ஓட்டு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE