பயிர்க்கடன் வட்டி அதிகரிப்பால் விவசாயத்துக்கு ஆபத்து: ராமதாஸ் குற்றச்சாட்டு

பயிர்க் கடனுக்கான வட்டியை மத்திய அரசு அதிகரித்திருப்பது விவசாயத் தொழிலையே முற்றிலு மாய் அழித்துவிடும் செயலாகும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது:

விவசாயிகளின் லாபத்தை அதிகரிப்பதாக வாக்குறுதி அளித்து மத்தியில் ஆட்சிக்கு வந்த பாரதிய ஜனதா, உழவுத்தொழிலை அடியோடு ஒழிப்பதற்கான நடவடிக் கைகளையே எடுத்து வருகிறது.

விவசாயப் பணிகளுக்காக வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் மொத்தம் ரூ.8.50 லட்சம் கோடி கடன் வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடனுக்கு, ரிசர்வ் வங்கியின் பரிந்துரைப்படி ஆண்டுக்கு 9 சதவீத வட்டி வசூலிக்கப்படுகிறது. விவசாயிகள் நலன் கருதி கடந்த 5 ஆண்டுகளாக 2 சதவீத வட்டி மானியத்தை மத்திய அரசு வழங்கி வந்தது. அதுமட்டுமின்றி, வங்கிக் கடனை தவணை மாறாமல் செலுத்துவோருக்கு கூடுதலாக 3 சதவீத மானியம் வழங்கப்பட்டு வந்தது. இதனால் வங்கிக் கடனைச் சரியாகச் செலுத்தும் விவசாயிகளுக்கு 4 சதவீத வட்டியில் பயிர்க்கடன் கிடைத்து வந்தது. மத்திய அரசு இதுவரை வழங்கப்பட்டு வந்த வட்டி மானியத்தை அடியோடு ரத்து செய்திருப்பதோடு, பயிர்க்கடன் வட்டியை 9 சதவீதத்திலிருந்து 11 சதவீதமாக உயர்த்தியிருக்கிறது.

கடந்த 4 ஆண்டுகளில் உரம், விதை உள்ளிட்ட விவசாயப் பொருட்களின் விலை 400 சதவீதம் உயர்ந்துள்ளன. ஆனால், விவசாய விளைபொருட்களின் கொள்முதல் விலையோ 40 சதவீதம் கூட உயர்த்தப்படவில்லை. அவ்வப்போது வறட்சியும், வெள்ளமும் வந்துவிடுவதால் விவசாயத் தொழில் பெரும்பாலும் நஷ்டமாகவே உள்ளது. தேசிய நிலப்பயன்பாட்டுக் கொள்கையை அறிமுகம் செய்து, அதன் அடிப்படையில்தான் வெளிப் படையான நிலங்கள் கையகப் படுத்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறிவிட்டு, பெரு நிறுவனங்களுக்குச் சாதகமாக நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், விவசாயப் பயிர்க்கடனுக்கான வட்டியை 11 சதவீதமாக உயர்த்தியிருப்பது விவசாயத் தொழிலையே அழித்து விடும் செயலாகும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE