கணவரை அபகரித்ததாக அல்போன்ஸா மீது புகார்: புகைப்படம், வீடியோ ஆதாரங்களை போலீஸிடம் கொடுத்தார் இளம்பெண்

நடிகை அல்போன்ஸா மீது புகார் கொடுத்த பெண்ணிடம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விசா ரணை நடத்தப்பட்டது. திருமண புகைப்படங்கள், வீடியோ காட்சி உட்பட பல ஆதாரங்களை அவர் போலீஸில் கொடுத்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த சுமித்ரா என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சமீபத்தில் ஒரு மனு கொடுத்தார். ‘‘என் கணவர் ஜெய்சங்கரை நடிகை அல்போன்ஸா தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். இதுபற்றி கேட்டால், கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார். அல்போன்ஸாவுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை ஜெய்சங்கர் தனது மனைவி என்ற குறிப்புடன் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். அல்போன்ஸா மீது நடவடிக்கை எடுத்து, கணவரை மீட்டுத்தர வேண்டும்’’ என்று அதில் கூறியிருந்தார்.

இதையடுத்து, கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின்படி, மத்திய குற்றப்பிரிவு கமிஷனர் ஜெயக்குமார் மேற்பார்வையில் வரதட்சணை தடுப்பு பிரிவு கூடுதல் துணை கமிஷனர் சியாமளாதேவி விசாரணை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், புகார் கொடுத்த சுமித்ரா நேற்று காலை 10 மணிக்கு விசாரணைக்காக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். அவரிடம் போலீஸ் அதிகாரி சியாமளாதேவி விசாரணை நடத்தினார். அப்போது, சுமித்ரா கூறியதாவது:

நானும் ஜெய்சங்கரும் 8 ஆண்டு களாக காதலித்தோம். 2013-ல் திருமணம் செய்துகொண்டோம். என் கணவரும், அல்போன்ஸாவின் தம்பியும் நண்பர்கள். அந்த பழக்கத்தில், அல்போன்ஸா எங்கள் திருமண வரவேற்புக்கு நேரில் வந்து வாழ்த்தினார்.

துபாய்க்கு வேலைக்கு சென்ற கணவர் என்னை அழைத்துச் செல்லவில்லை. அதன் பிறகுதான் அல்போன்ஸாவுக்கும், என் கணவருக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. அல்போன்ஸா திடீரென ஒருநாள் எனக்கு போன் செய்து, ‘நான்தான் ஜெய்சங்கரை முதலில் திருமணம் செய்துகொண்டேன். நீ அவரை விட்டு ஓடிவிடு. இல்லாவிட்டால் கொன்றுவிடுவேன்’ என்று மிரட்டினார்.

இவ்வாறு சுமித்ரா கண்ணீர் மல்க கூறியதாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. அவர் கூறியதை போலீஸார் பதிவு செய்துகொண்டனர். தனக்கும் ஜெய்சங்கருக்கும் திருமணம் நடந்ததற்கான புகைப்பட ஆதாரங்கள், அல்போன்ஸாவுடன் ஜெய்சங்கர் ஒன்றாக இருக்கும் பேஸ்புக் போட்டோக்கள், நட்சத்திர ஹோட்டலில் அல்போன்ஸாவும் ஜெய்சங்கரும் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஆகியவற்றையும் போலீஸாரிடம் சுமித்ரா கொடுத்துள்ளார்.

இதையடுத்து அல்போன்ஸா, ஜெய்சங்கரிடமும் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்தனர். அவர்கள் இருவரும் கமிஷனர் அலுவலகத்துக்கு நேற்று பகல் 1 மணி அளவில் வருவதாக தகவல் வெளியானது. ஆனால், வரவில்லை. அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE