அக்னி நட்சத்திரம் மே 4-ம் தேதி தொடக்கம்

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் மே மாதம் 4-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோதிடத்தின்படி சூரியன் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு நகர்ந்து செல்லும் காலம்தான் அக்னி நட்சத்திரம் அல்லது கத்தரி வெயில் என்று கூறப்படுகிறது. இந்த காலத்தில் பொதுவாக உஷ்ணம் அதிகமாக இருக்கும் என்பதால் உடல் உபாதைகள் ஏற்படலாம், சுப காரியங்கள் மேற்கொள்ளக் கூடாது என்று கூறப்படுகிறது.

பொதுவாக மே மாத முதல் வாரத்தில் தொடங்கிவிடும் அக்னி நட்சத்திரம் இந்த ஆண்டு 4-ம் தேதி தொடங்கி 26 நாட்கள் நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் வெயில் 110 டிகிரி அல்லது அதற்கு மேலும் கூட பதிவாகலாம். ஆனால், தமிழகத்தில் இப்போதே அக்னி நட்சத்திரக் காலத்தை போன்ற வெயில் காணப்படுகிறது.

வேலூரில் நேற்று 103.1 டிகிரி வெயில் பதிவாகியது. திருச்சியில் 104.18 டிகிரி, மதுரையில் 102.20 டிகிரி, கரூரில் 104 டிகிரி, பாளையங்கோட்டையில் 100.40 டிகிரி, தருமபுரியில் 103.10 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யாததால் வறண்ட வானிலையே காணப்பட்டது.

எனினும் அடுத்த இரண்டு நாட்களில் ஆங்காங்கே லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE