பாமக சார்பில் சென்னையில் 10-ம் தேதி போராட்டம்

By செய்திப்பிரிவு

பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புகையிலைப் பொருட்களின் உறைகள் மீது 85 சதவீதம் பரப்பளவில் எச்சரிக்கைப் படங்களை வெளியிடும் திட்டத்தின் அறிவிக்கை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 15-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த திட்டம் ஏப்ரல் 1-ம் தேதிமுதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தை மத்திய அரசு ஒத்தி வைத்துள்ளது. புகையிலையால் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் உயிரிழக்கும் நிலையில் மக்கள் நலனில் அக்கறை இல்லாமல், புகையிலை நிறுவனங்களுக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

புகையிலைப் பொருட்களின் உறைகள் மீது 85 சதவீத அளவில் எச்சரிக்கைப் படங்களை வெளியிடும் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதனை வலியுறுத்தி, பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் வரும் 10-ம் தேதி காலை 10.00 மணிக்கு சென்னையில் மாபெரும் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும். இந்த போராட்டத்தில் பசுமைத் தாயகம் மற்றும் புகையிலைக்கு எதிரான அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் கலந்து கொள்வர்.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE