முற்றுகை போராட்டம் எதிரொலி: நெல்லையில் ஆந்திர வங்கி ஊழியர்கள் உருக்கமான போஸ்டர்

திருநெல்வேலியில் ஆந்திர வங்கியை முற்றுகையிட்டு, ஆந்திர முதல்வரின் உருவ பொம்மையை எரித்த தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் உள்ளிட்ட 100 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், இதுகுறித்து மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த வலியுறுத்தியும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருநெல்வேலி சந்திப்பில் உள்ள ஆந்திரா வங்கியை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட்டது.

போராட்டத்துக்கு அக்கட்சியின் தலைவர் ஜான்பாண்டியன் தலைமை வகித்தார். அக்கட்சியினர் வங்கியை பூட்டுவதற்காக பூட்டு, சாவியுடன் ஊர்வலமாக வந்தனர். திருநெல்வேலி மாநகர காவல்துறை உதவி ஆணையர் கந்தசாமி தலைமையிலான போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஊர்வலமாக வந்தவர்கள் திடீரென்று சந்திரபாபு நாயுடு உருவபொம்மையை தீயிட்டு எரித்தனர். அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட ஜான்பாண்டியன் உள்பட 100 பேரை போலீஸார் கைது செய்தனர்.

உருக்கமான போஸ்டர்

கடந்த 3 நாட்களாக தொடர்ந்து முற்றுகை போராட்டத்துக்கு உள்ளாகும் இந்த வங்கியில் ஊழியர்கள் தரப்பில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில் எழுதப்பட்டிருந்த வாசகங்கள்:

'இந்த வங்கி ஆந்திர மாநில அரசுக்கு சொந்தமானதல்ல. இது ஒரு மத்திய அரசு நிறுவனம். இங்கு பணியில் உள்ளவர்கள் அனைவரும் தமிழர்களே' என்று எழுதப்பட்டிருந்தது.



VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE