கிரானைட் குவாரிகளை படம் பிடிக்க சகாயத்துக்கு உதவியவர் விபத்தில் பலி

By செய்திப்பிரிவு

கிரானைட் குவாரிகளை ஆள் இல்லா விமானம் மூலம் படம் பிடிக்க ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயத்துக்கு உதவியவர் சாலை விபத்தில் பலியானார்.

மதுரை மாவட்டத்தில் நடைபெற்றுள்ள கிரானைட் முறைகேடு குறித்து சட்ட ஆணையர் உ.சகாயம் விசாரித்து வருகிறார். பல குவாரிகளில் தண்ணீர் தேங்கியிருந்தபோது, வெட்டப்பட்ட கற்களின் அளவை கணிக்க முடிவில்லை.

இதனால் 25 குவாரிகளின் அதிபர்களுக்கு அபராதம் விதிக்க முடியாத நிலை இருந்தது. மேலும் குவாரிகளால் ஏற்பட்ட பாதிப்புகளை முழுமையாகப் போட்டோ, வீடியோவில் பதிவு செய்வதற்கு ஆள் இல்லா குட்டி விமானம் ஜனவரி மாதம் 12-ம் தேதி இடையப்பட்டியில் உள்ள பிஆர்பி குவாரியில் முதல் முறையாக பயன்படுத்தி அளவீடு செய்யப்பட்டது.

இந்த விமானத்தை மதுரை வீரபாஞ்சானை சேர்ந்த பார்த்தசாரதி(54) இயக்கினார். அன்றே இந்த விமானம் பாறையில் மோதி தண்ணீரில் மூழ்கியது. பின்னர் வேறு குட்டி விமானத்தை பயன்படுத்தி பிஆர்பி உள்ளிட்ட பல குவாரிகள், கால்வாய்கள், நீர்நிலைகள் அழிக்கப்பட்டதை படம் பிடிக்கப்பட்டது.

இதே நேரத்தில் சகாயத்துக்கு கொலை மிரட்டல் வந்ததால், தனக்கு ஏதும் ஆபத்து வருமா என பார்த்தசாரதி அச்சம் தெரிவித்திருந்தார். இந் நிலையில், நேற்று அதிகாலை 5.30 மணியளவில் சிவகங்கை சாலையில் உள்ள லட்சுமி பள்ளி அருகே பார்த்தசாரதி ஓட்டிச்சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியது.

இதில் படுகாயமடைந்த பார்த்தசாரதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். விபத்தில் சதி இருக்கலாம் என அவரது உறவினர்கள் சகாயத்துக்கு தகவல் அளித்தனர். சகாயம் உத்தரவின்பேரில் சம்பவ இடத்தை மதுரை காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதாரி உட்பட அதிகாரிகள் பலர் பார்வையிட்டனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவிலும் ஆய்வு செய்யப்பட்டது.

இது குறித்து கருப்பாயூரணி போலீஸார் கூறுகையில், இரவு முழுவதும் பார்த்தசாரதி தூக்கமின்றி இருந்துள்ளார். கார் ஓட்டியபோது தூக்கம் அல்லது மாரடைப்பு வந்ததால் திடீர் விபத்து நடந்திருக்கலாம். வேறு வாகனங்கள் மோதியதற்கான எந்த தடயமும் இல்லாததால், விபத்தில் இறந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE