திருச்சியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் குழுமணி செல்லும் வழியில் உள்ளது நீ.சாத்தனூர் (நீராரம்பம் சாத்தனூர்) கிராமம். இந்த கிராமத்தில் உள்ள சன்னாசியப்பன் கோயில் குளத்தில் உள்ள நீர் பாம்புக்கடிக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பாம்பு தீண்டியவர்களை இங்கு அழைத்துவந்து குளத்து நீரை (ஒரு சொம்பு அளவு) குடிக்கக் கொடுக்கின்றனர். அன்று இரவு முழுவதும் தூங்காமல் கோயில் வாசலில் கண் விழித்து அமர்ந்திருந்தால் முழுமையாக குணமடைந்து விடுகிறது என்கின்றனர் இக்கிராம மக்கள்.
பாம்பு தீண்டி, குளத்து நீரைக் குடித்து உயிர் பிழைத்த அதே ஊரைச் சேர்ந்த காத்தலிங்கம்(44) என்பவர் கூறியபோது, “2 வருடங்களுக்கு முன் கட்டு விரியன் பாம்பு தீண்டியது. உடனே இக்கோயிலுக்கு வந்து சன்னாசியப்பனை வேண்டிக்கொண்டு குளத்து நீரைக் குடித்துவிட்டு ஒருநாள் இரவு முழுவதும் கண் விழித்திருந்தேன். பாம்புக்கடி விஷம் முறிந்து 2 நாட்களில் முழுமையாக குணமடைந்தேன்” என்றார்.
இதேபோன்று அருகில் உள்ள கீரிக்கல்மேடு, கிளியூர், போசம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் பூப் பறிக்கச் செல்வோர் பாம்பு தீண்டி சிகிச்சைக்காக இங்கு வருவது தொடர்கிறது என்கின்றனர் கிராம மக்கள்.
இதுகுறித்து, கோயில் பூசாரி ராஜேந்திரனிடம் கேட்டபோது, “பல தலைமுறைகளுக்கு முன் நீ.சாத்தனூர் கிராமத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது, கெழுத்தி மீனின் முள் வாயில் சிக்கிய நிலையில் தவித்த நல்ல பாம்புக்கு சிலர் உதவியதால், இந்த ஊரில் உள்ளவர்களை பாம்பு தீண்டாது, அவ்வாறு தீண்டினாலும் விஷம் ஏறாது என்பது நம்பிக்கையாக உள்ளது.
மாதந்தோறும் சராசரியாக 10 பேர் பாம்புக் கடியால் பாதிக்கப்பட்டு இங்கு வந்து கோயில் குளத்து நீரைக்குடித்து குணமடைந்து வருகின்றனர். கோடைக் காலத்தில் கூட இந்தக் குளம் வற்றாது” என்றார்.
தற்போது இந்தக் குளத்தின் சுற்றுச்சுவர் சேதமடைந்து, நீர் பாசி படிந்த நிலையில் உள்ளது. குளத்தைச் சீரமைக்குமாறு ஊராட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனை சீரமைக்க ரங்கம் தொகுதி எம்எல்ஏ வளர்மதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது கிராம மக்களின் எதிர்பார்ப்பு.
அறிவியல்பூர்வமாக ஏற்கமுடியாது
இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் என்.கே.முரளிதரனிடம் கேட்டபோது, “எல்லா பாம்புகளுமே விஷத்தன்மை கொண்டவை அல்ல. எந்த வகை பாம்பு தீண்டியது என்று தெரியாத நிலையில் இதுபோல சிகிச்சை பெற்றிருக்கலாம். சிலர் பாம்பு தீண்டியவுடன் முதலுதவி சிகிச்சை பெற்றுக்கொண்டு, அதன்பின் கோயில்களுக்குச் சென்று வேண்டிக்கொண்டதால் குணமடைந்ததாகக் கூறுவதுண்டு. குளத்து நீரைக் குடித்து குணமடைவது அறிவியல்பூர்வமாக ஏற்கக்கூடியது அல்ல. தேவைப்பட்டால் அந்தக் குளத்து நீரைப் பரிசோதித்துப் பார்த்தால், அந்த நீரின் தன்மை குறித்து கூறமுடியும்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
27 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago