வறண்டு கிடக்கும் காஞ்சிபுரம் ரங்கசாமி குளம்: கழிவுநீர் ஓடையில் கலந்து வீணாகும் மழைநீர் - நகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

காஞ்சிபுரம் நகரத்தின் மையப் பகுதியில் உள்ள ரங்கசாமி குளம் வறண்டு காணப்படும் நிலையில், மழைநீர் கரைபுரண்டு கழிவு நீர் ஓடையில் கலந்து வீணாகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்துக்கு மழை நீரை திருப்பி விடுவதன் மூலம் நிலத் தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் நகரத்தின் மையப் பகுதியில் 2 ஏக்கர் பரப்பளவில் ரங்கசாமி குளம் அமைந்துள்ளது. இதில் தண்ணீர் தேங்காததால் நகரப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக குறைந்து விட்டது. இதற்காக அண்ணா நூற்றாண்டு விழாவின்போது ரூ.23 லட்சம் சிறப்பு நிதியின் மூலம், குளத்தின் நீர் வரத்து கால் வாய்கள், படித்துறைகள் மற்றும் அதனருகே பூங்கா ஆகியவற்றை நகராட்சி நிர்வாகம் அமைத்தது.

ஆனால், நீர்வரத்து கால்வாய்களை சரியான திட்டமிடுதலுடன் அமைக்காத காரணத்தால் மழை நீர் குளத்துக்கு செல்லாமல் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், விளக்கடி கோயில் தெரு பகுதியில் மழைக்காலங்க ளில் அதிக மழைநீர் சாலையில் தேங்குவது வாடிக்கை. இதை ரங்கசாமி குளத்துக்கு திருப்பி விடும் வகையில் சாலையோரம் மழை நீர் கால்வாய் அமைக்கப்பட்டது. ஆனால், இந்த கால்வாயை அப்பகுதியில் உள்ள கடைக்காரர் கள் ஆக்கிரமித்ததால் அடைப்பு ஏற்பட்டு மழைநீர் குளத்துக்குச் செல்ல வழியில்லாமல் போனது. இதன்காரணமாக அப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் கலந்து மழைநீர் வீணாகிறது.

இதுகுறித்து, கருத்து தெரிவித்த சமூக ஆர்வலர்கள், ‘மழை பெய்தால் மட்டுமே குடிநீர் தேவையை சமாளிக்க முடியும் என நகராட்சி கூறி வருகிறது. ஆனால், நகரத்தில் பெய்யும் மழை நீரை சேமிக்க அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வில்லை.

தற்போது நகராட்சியில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப் பாட்டுக்கு நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்ததே காரணம். ஆனால், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்காமல் மழைநீர் கழிவுநீர் கால்வாயில் விடப்படுகிறது. ரங்கசாமி குளத்துக்கு மழைநீர் திருப்பிவிடப்பட்டால் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயரும்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் நகராட்சி ஆணையர் சர்தார் கூறிய தாவது: விளக்கடி கோயில் தெருப் பகுதியில் சாலையில் தேங்கும் மழைநீர், கழிவுநீர் கால்வாயில் கலப்பது குறித்த தகவல் கவனத் துக்கு வரவில்லை. ரங்கசாமி குளத்தில் மழைநீர் செல்வதற்கான கட்டமைப்புகளை சில நாட்களுக்கு முன்புதான் ஆய்வு நடத்தப்பட்டது.

காந்தி ரோடு, விளக்கடி கோயில் தெரு, எம்எம் அவென்யூ ஆகிய பகுதிகளில் சேகரமாகும் மழைநீர் ரங்கசாமி குளத்துக்கு வந்தடையும் வகையில் கட்டமைப்புகளை ஏற்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். இதுதவிர நகரத்தின் அனைத்து பகுதி குளங்களிலும் மழைநீர் செல்வதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட உள்ளது என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE