சிகரெட் விவகாரம்: பிரதமர் உடனடியாக தலையிட அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

புகையிலை பாதிப்பால் இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 10 லட்சம் பேர் இறக்கின்றனர். புகையிலை உபயோகப்படுத்துவதால் புற்றுநோய் வராது என பாரதிய ஜனதா எம்.பி. கூறியிருப்பது தவறான தகவல். இவ்விஷயத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் என்று பாமக எம்.பியும், முன்னாள் மத்திய சுகாதார அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில், 2016-ம் ஆண்டில் ஆட்சி மாற்றம், தமிழக முன்னேற்றம் குறித்து பாமக நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் இன்று சென்னை மந்தைவெளியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்க வந்த அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நான் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது புகையிலைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த எச்சரிக்கை விளம்பரத்தை புகையிலை பெட்டிகளில் 40 சதவீத அளவுக்கு அச்சிட சட்டம் இயற்றப்பட்டது. இந்நிலையில், இந்த விளம்பரத்தின் அளவை 40 சதவீதத்தில் இருந்து 85 சதவீதமாக அதிகரித்து மத்திய சுகாதாரத் துறை அறிவிப்பாணை வெளியிட்டது. இந்த உத்தரவு ஏப்ரல் 1-ம் தேதிமுதல் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், திடீரென இந்த முடிவு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. புகையிலைப் பொருட்களை தயாரிக்கும் பெரிய நிறுவனங்களின் அழுத்தம் காரணமாக இந்த முடிவை மத்திய அரசு தள்ளி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

புகையிலை பாதிப்பால் இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 10 லட்சம் பேர் இறக்கின்றனர். புகையிலை உபயோகப்படுத்துவதால் புற்றுநோய் வராது என பாரதிய ஜனதா எம்.பி. கூறியிருப்பது தவறான தகவல். இவ்விஷயத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும்.

அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கொடுத்த நெருக்கடி காரணமாக நெல்லை வேளாண் அதிகாரி முத்துகுமாரசாமி தற்கொலை செய்துள்ளார். இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசு இதுவரை 3 முறை அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டியுள்ளது.

ஆனால், இத்திட்டம் குறித்து விவாதிக்க தமிழக அரசு இதுவரை அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டவில்லை. கர்நாடக மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் இவ்விவகாரத்தில் தமிழக அரசு அழுத்தம் கொடுக்காமல் உள்ளது. இதற்கு பெங்களூரில் நடைபெற்று வரும் வழக்குதான் காரணம் என கூறப்படுகிறது.

ஜெயலலிதா முதல்வராக பதவி வகித்தபோது, ரூ.44 ஆயிரம் கோடி மதிப்பிலான புதிய தொழில்களை தொடங்குவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டன. அவற்றில் இதுவரை எத்தனை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும்.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE