அரசின் கடன் சுமை குழப்பத்தை நீக்குங்கள்: ஓ.பி.எஸ்.ஸுக்கு கருணாநிதி வலியுறுத்தல்

தமிழக நிதிநிலை - கடன் சுமை குறித்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறிய பதிலில் உண்மை உள்ளதா என திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"அனைத்து நாடுகளும், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் பொதுக் கடன் மூலம் நிதி திரட்டி, அவற்றைப் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் முதலீட்டுச் செலவினங்களை மேற்கொள்வது வழக்கமான ஒரு நடைமுறை தான்.

இது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வரும் வழிமுறையாகும்" என்றெல்லாம் பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார். இல்லை, படித்திருக்கிறார்.

ஒரு அரசு பொதுக் கடன் வாங்குவது தவறல்ல என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் தி.மு.க ஆட்சியில் கடன் பெற்ற போது அ.தி.மு.க. தலைவி என்னவெல்லாம் பேசினார்? தி.மு.க. அரசு கடன் வாங்கினால் தவறு, அ.தி.மு.க. அரசு கடன் பெற்றால் மட்டும் உலக நாடுகளில் வழக்கமான நடைமுறையா?

தி.மு.க ஆட்சியின் போது பேரவையில் பேசிய ஜெயலலிதா என்ன சொன்னார்? "தமிழ்நாட்டின் ஒட்டு மொத்தக் கடன் சுமை 90 ஆயிரம் கோடி ரூபாய்; தமிழ்நாட்டில் ஒவ்வொரு குழந்தை பிறக்கும்போதும் தலா 15 ஆயிரம் ரூபாய் கடனுடன் பிறக்கிறது" என்று சொன்னாரா? இல்லையா?

நிதிநிலை அறிக்கையில், பொது விவாதத்திற்கு அளிக்க வேண்டிய பதிலை, முதலமைச்சர் விவாதத்தின்போது குறுக்கிட்டு படித்திருக்கிறார். ஆனால் முதலமைச்சரோ, மற்ற சில அமைச்சர்களோ அவையில் பேசும் போது எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எந்த ஒரு உறுப்பினருக்கும் அதிலே குறுக்கிட அனுமதியில்லை என்ற சர்வாதிகார நிலை தான் தொடர்ந்து நீடித்து வருகிறது.

"2015-2016 நிதி ஆண்டினுடைய இறுதியில் தமிழக அரசின் மொத்தக் கடன் அளவு 2,11,483 கோடி. மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 25 சதவிகிதம் வரை கடன் பெறலாம், ஆனால் நாங்கள் 19.24 சதவிகிதம் தான் கடன் வாங்கியிருக்கிறோம்" என்று முதலமைச்சர் சமாதானம் கூறுகிறார். 2011-2012ஆம் ஆண்டில் 19.84 சதவிகிதமாக இருந்த கடன் அளவை, 2014-2015ஆம் ஆண்டு இறுதியில் 19.21 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது, கடன் அளவைக் குறைக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தவறான வாதமாகும் என்று பன்னீர்செல்வம் பேரவையில் சொல்லியிருக்கிறார்.

அதாவது தி.மு.க ஆட்சியில் 90 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் இருந்தது, தற்போது 2 இலட்சத்து 11 ஆயிரத்து 483 கோடி ரூபாய் என்ற அளவுக்கு அந்தக் கடன் உயர்ந்திருக்கிறது. ஆனால் அப்படிச் சொன்னால் உண்மை உலகுக்குத் தெரிந்து விடுமென முதலமைச்சர் பன்னீர்செல்வம் சாமர்த்தியமாகச் சொல்கிறார், சதவிகிதக் கணக்கில் கடன் அளவைக் குறைத்து விட்டோம், கடன் அளவைக் குறைக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தவறான வாதமாகும் என்று பதிலளித்திருக்கிறார்.

இரண்டாவதாகப் பன்னீர்செல்வம் கூறியிருப்பது, 2014-2015ஆம் ஆண்டுக்கு திருப்பி செலுத்த வேண்டிய வட்டி 14,755 கோடி ரூபய். 2015-2016ஆம் ஆண்டில் திருப்பி செலுத்த வேண்டிய வட்டி 17,139 கோடி ரூபாய். இது மாநிலத்தின் வருவாய் வரவில் 12.01 சதவிகிதம். அம்மா தலைமையில் இந்த அரசு பொறுப்பேற்றபோது இந்த அளவு 18.67 சதவிகிதமாக இருந்ததை, 12.01 சத விகிதமாகக் குறைத்து விட்டோம் என்று பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

கடனைக் குறைத்து விட்டீர்களா என்றால், வருவாய் வரவில் உள்ள சதவிகிதத்தைக் குறைத்து விட்டோம் என்பது பதிலா? பாவம், எப்படியெல்லாம் சதவிகிதக் கணக்கைச் சொல்லி முதலமைச்சர் சமாளித்திருக்கிறார்? கடந்த ஆண்டு திருப்பி செலுத்த வேண்டிய வட்டியின் அளவை விட இந்த ஆண்டு வட்டியின் அளவு 3000 கோடி ரூபாய் உயர்ந்திருக்கிறது. ஆனாலும் முதலமைச்சர் அதைச் சமாளிக்க எண்ணுகிறார்.

"திவாலாகும் நிலை ஒன்றும் இந்த அரசுக்கு ஒரு போதும் ஏற்படாது" என்று பேரவையில் பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார். இது உண்மையா? அப்படி யென்றால் தமிழக முதலமைச்சர், ஓ.பன்னீர்செல்வம், இந்தியப் பிரதமருக்கு கடந்த டிசம்பரில் எழுதிய கடிதத்தில், "தமிழ்நாடு ஏற்கனவே கடும்நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது; தமிழக அரசுக்குக் குறிப்பிட்ட வருவாய் ஆதாரங்கள் மட்டுமே உள்ளதைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, கூடுதலாக எந்தவொரு நிதிச் சுமையையும் தமிழக அரசு ஏற்றுக் கொள்வது என்பது மிகக் கடினமானதாகும்" என்று தெரிவித்திருந்தாரே; அது தவறான தகவலா?

முதலமைச்சர், பன்னீர்செல்வம் அப்போது பிரதமருக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில், 31-12-2014 அன்று 'இந்து' நாளேடு, (Tamilnadu faces financial crunch: CM admits to limited sources of revenue) என்ற தலைப்பில் It’s official and out in the open. The State government’s financial health is quite bad. It was revealed in an innocuous statement by Chief Minister O. Panneerselvam (அதிகாரி கள் மட்டத்திலே இருந்தது அம்பலத்துக்கு வந்து விட்டது; மாநில அரசின் நிதி நிலைமை மிக மோசமாக உள்ளது. முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் அறிக்கையிலேயே இது கூறப்பட்டுள்ளது) என்று தெரிவித்ததே, அந்தச் செய்தி உண்மையா? இல்லையா?

மேலும் முதலமைச்சர் பன்னீர்செல்வம், 2011-12ஆம் ஆண்டுக் கணக்குப்படி மாநிலத்தினுடைய சொந்த வரி வருவாய், 59,517.30 கோடி ரூபாயாக இருந்தது, 2014-2015ஆம் ஆண்டு திருத்த மதிப்பீட்டின்படி 85,769.27 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்று பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார். 2014-2015ஆம் ஆண்டு திருத்த மதிப்பீட்டைக் குறிப்பிட்ட முதல் அமைச்சர், 2014-2015ஆம் ஆண்டின் திட்ட மதிப்பீட்டை ஏன் கூறவில்லை?

2014-2015ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட மதிப்பீட்டின்படி, மாநில அரசின் சொந்த வரி வருவாயாகக் குறிப்பிட்டிருப்பது 91,835.35 கோடி ரூபாய். அந்தத் தொகை தான் திருத்த மதிப்பீட்டில் 85,772.71 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. இதை அப்படியே சொன்னால் சாயம் வெளுத்து விடுமென்று இதை கவனமாக மறைத்து, திருத்த மதிப்பீட்டை மட்டும் முதலமைச்சரிடம் கொடுத்துப் படிக்கச் செய்திருக்கிறார்!

அது போலவே 2014-2015ஆம் ஆண்டுக்கான மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் - மாநில அரசின் சொந்த வரி வருவாய் விகிதம் 9.75 சதவிகிதம் என்பது, 2015-2016ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டின்படி மாநில மொத்த உற்பத்தி மதிப்பில், மாநில அரசின் சொந்த வரி வருவாய் விகிதம் 8.74 சதவிகிதமாகக் குறைந்துள்ளது என்பது தான் உண்மை. இந்தப் புள்ளி விவரத்தையும் நிதியமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ள முதல் அமைச்சர் இத்தனை நாட்களுக்குப் பிறகும் தெரிந்து கொள்ளாமலா இருப்பார்?

வருவாய் பற்றி முதலமைச்சர் கூறிய காரணத்தால் கூறுகிறேன். முத்திரைத் தாள் தீர்வை மற்றும் பதிவு மூலமாக 2014-2015இல் கடந்த ஆண்டு 10,470.18 கோடி ரூபாய் வருவாய் எதிர்பார்க்கப்பட்டது. இது திருத்த மதிப்பீட்டில் 9,330 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. அது போலவே மோட்டார் வாகன வரி வருவாய் 2014-2015ஆம் ஆண்டில் 5,147.14 கோடி ரூபாயாக இருக்குமென்று நிர்ணயித்திருந்தார்கள். இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் இதுவும் 4,882.53 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.

முதலமைச்சர் பன்னீர்செல்வம், பேரவையில் நிதித் துறை அதிகாரிகள் எழுதிக் கொடுத்த நீண்ட அறிக்கையினை சாதுர்யமான பதில் என்றெண்ணி அப்படியே படித்த காரணத்தால், உருவாகியிருக்கும் குழப்பத்தைக் கலைத்து, உண்மை விவரங்களைத் தெரிவித்திட இந்த அறிக்கையினை வெளியிட வேண்டியவனானேன்.

இவ்வாறு கருணாநிதி அந்த அறிக்கையில்குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்