மக்கள் தொடர்பு அலுவலர்கள் அரசுக்கு நல்ல பெயர் வாங்கித் தரவேண்டும்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிவுறுத்தல்

செய்தி - மக்கள் தொடர்பு அலுவலர்கள் நல்ல முறையில் பணியாற்றி அரசுக்கு நல்ல பெயர் வாங்கித் தரவேண்டும் என செய்தித் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

தமிழக அரசு மக்கள் தொடர்பு அலுவலர்கள் பணி ஆய்வுக் கூட்டம் சென்னை நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாக கூட்ட அரங்கில் இன்று நடந்தது. தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட செய்தி - மக்கள் தொடர்பு அலுவலர்கள், செய்தித் துறை சார்பில் பிற துறைகளில் அயல்பணியாற்றும் மக்கள் தொடர்பு அலுவலர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்துக்கு செய்தித் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமை வகித்தார். அவர் பேசும்போது, ‘‘கடந்த 4 ஆண்டுகளில் தமிழக அரசு துறைவாரியாக செய்த சாதனைகள், திட்டங்களை அனைத்து தரப்பினரும் அறிந்துகொள்ளும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும். முக்கிய விழாக்கள், மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளில் அரசின் சாதனைகள், திட்டங்களை விளக்கும் புகைப்படக் கண்காட்சி அமைக்க வேண்டும். கிராமங்களில் வீடியோ படக்காட்சிகளை காட்ட வேண்டும். செய்தி மக்கள் தொடர்புத் துறை மூலம் தகவல்கள் மற்றும் சாதனைகள் தொகுப்பு வங்கி, கணினியில் விரைவில் தொடங்கப்படும். அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கும் வகையில் செய்தி - மக்கள் தொடர்பு அலுவலர்கள் கவனத்துடன், பொறுப்புன் செயல்பட வேண்டும்’’ என்றார்.

செய்தியாளர் சுற்றுப்பயணம், பத்திரிகையாளர்கள் நலன், பத்திரிகையாளர்கள் ஓய்வூதியம் ஆகியவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டன. செய்தித் துறை செயலர் ராஜாராம், இயக்குநர் குமரகுருபரன், இணை இயக்குநர்கள் எழிலழகன், தங்கப்புகழேந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.





VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE