திருச்சி அரசு மருத்துவமனை ஆர்எம்ஓ தற்கொலை முயற்சி: பணிச்சுமை, அரசியல்வாதிகளின் தொல்லை காரணமா?

திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உள்ளுறை மருத்துவ அதிகாரி யான (ஆர்எம்ஓ) நேரு, நேற்று அதிகாலை அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேரு, 2 மாதங்களுக்கு முன்புதான் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியிலிருந்து திருச்சிக்கு மாற்றலாகி வந்தார். திருச்சி மருத்துவமனையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆர்எம்ஓ பதவிக்கு நிரந்தர மருத்துவர் இல்லை. அதிக பொறுப்பு நிறைந்த இந்த பதவிக்கு வர மருத்துவர்கள் தயங்குவதால் பொறுப்பு அலுவலர்கள் மாதம் ஒரு முறை சுழற்சி முறையில் இந்த பணியைக் கவனித்து வருகின்றனர்.

அந்த வகையில் நேருவை 6 மாதம் இருக்கவைத்துவிடலாம் என உயரதிகாரிகள் திட்டமிட்டதாகவும், அந்த தகவல் குறித்து சக மருத்துவர் கள் நேருவிடம் கூறியதாகவும் தெரிகிறது.

மேலும், நேற்று முன்தினம் ஜெய லலிதா பிறந்த நாளை முன்னிட்டு மரக்கடை அருகே சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி முடித்துவிட்டு, அதே தினத்தில் திருச்சிக்கு ஆளுநர் ரோசய்யா, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஆகியோர் வருகையை முன்னிட்டு அவர்களுடன் சென்று வர மருத்துவ குழுக்களை ஏற்பாடுகளை செய்துவிட்டு இரவு தாமதமாக வீடு திரும்பியுள்ளார் நேரு. இந்நிலையில் நள்ளிரவுக்குப் பின் 3.30 மணிக்கு, பணிக்கு வருமாறு தொலைபேசி மூலம் அவருக்கு அவசர தகவல் வந்துள்ளது.

வெறுப்புடன் பணிக்குச் சென்ற நேரு, அதிகாலை 5 மணிக்கு தனது மனைவிக்கு போன் செய்து ‘நான் தூக்கமாத்திரை சாப் பிட்டுவிட்டேன். சாகப்போகிறேன்’ என தெரிவித்திருக்கிறார். இதைக் கேட்ட அவரது மனைவி பிற மருத் துவர்களுக்கு தகவல் தெரிவித் துள்ளார். அவர்கள் உடனடியாக நேருவை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர்.

12 மணி நேரம் வேலை

இதுகுறித்து நேருவின் மனைவியிடம் பேசியபோது, “மருத்துவ பேராசிரியரான எனது கணவரை நிர்வாகப் பொறுப்பும், பணிச் சுமையும் நிறைந்த ஆர்எம்ஓ பதவி யில் நியமித்தது ஏற்புடையதல்ல. இந்த பொறுப்புக்கு வந்த பிறகு அவர் ஒரு நாளைக்கு 12 மணி நேரத்துக்கும் மேலாக வேலை செய்ய வேண்டியுள்ளது.

மேலும், கட்சிக்காரர்கள் நேரம் காலம் பார்க்காமல் சொல்லும் வேண்டுகோளைச் செய்து முடிப்பதே இவருக்கு மிகச் பெரிய சவாலாக இருக்கிறது.

இது போன்ற பதவிகளுக்கு பேராசிரியர்களை நியமிக்காமல் நிர்வாகப் பொறுப்பில் அனுபவம் வாய்ந்தவர்களை தமிழக அரசு, நியமிக்க வேண்டும்” என்றார்.

புகார் செய்யவில்லை

மாதம் ஒரு மருத்துவரை சுழற்சி முறையில் ஆர்எம்ஓ பதவியில் நியமித்துவந்த நிலையில், ஒன்றரை மாதங்களுக்கு மேலாக இவரை இப்பதவியில் தொடரச் செய்ததும், அரசியல்வாதிகள் அடிக்கடி கொடுத்து வந்த தொல்லையும், நிர்வாகப் பணியில் அனுபவம் இல்லாதவரை இந்த பதவியில் அமர்த்தியதும்தான், ஆர்எம்ஓ நேருவின் தற்கொலை முயற்சிக்கு காரணங்களாகக் கூறப்படும் நிலையில், இச்சம்பவம் குறித்து ரங்கம் காவல் உதவி ஆணையர் கபிலனிடம் கேட்டதற்கு, “இது குறித்து எங்களுக்கு எந்தப் புகாரும் வரவில்லை” என்றார்.

பணிச்சுமை இல்லை

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி டீன் முரளிதரனிடம் கேட்டபோது, “மருத்துவர் நேரு தனக்கு இந்த பதவியில் இருக்க விருப்பமில்லை என தெரிவித்திருந்தால் மாற்று ஏற்பாடு செய்து, அவரை இந்த பொறுப்பிலிருந்து விடுவித்திருப்பேன். அவர் என்னிடம் இதுகுறித்து எதுவுமே தெரிவிக்கவில்லை. இது கூட்டுப் பொறுப்பு நிறைந்த பதவி. இதில் பணிச்சுமை என்ற பேச்சுக்கு இடமில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த பதவியை விரும்பி ஏற்க எந்த மருத்துவரும் வரத் தயாராக இல்லை என்பதால் மாதம் ஒரு மருத்துவரை சுழற்சி முறையில் இந்த பதவியில் நியமித்து வருகிறேன். இன்னும் சில தினங்களில் ஆர்எம்ஓ பதவிக்கு வேறு மருத்துவரை நியமிக்கவிருந்த நிலையில், இப்படியொரு முடிவை நேரு எடுத்தது வருத்தம்தான்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE