மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் நிதி வெட்டு: ஈவிகேஎஸ் இளங்கோவன்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதியில் 45 சதவீதம் நிதிவெட்டு ஏன் அமல்படுத்தப்பட்டு வருகிறது? என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' கிராமப்புறங்களில் வாழும் ஏழை குடும்பத்திலிருந்து ஒருவருக்கு ஒரு நிதியாண்டில் குறைந்தது 100 நாட்கள் வேலை வாய்ப்பு வழங்கி வாழ்வாதார பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்தில் மத்திய காங்கிரஸ் அரசால் 2006 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டதுதான் மகாத்மா காந்திதேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம்.

உலகளவில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 5 கோடி குடும்பங்களில் ஒருவருக்கு நாள்தோறும் ரூ.148 ஊதியத்துடன் வேலை வாய்ப்பு வழங்கும் புரட்சிகர திட்டமாகும். சோனியாவின் கனவு திட்டமான இதன்மூலம் கிராமப்புற மக்களின், குறிப்பாக பெண்களின் வாங்கும் சக்தி உயர்ந்து வாழ்வாதாரம்சுயசார்பு நிலையை அடைந்துள்ளது.

ஆனால் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் இத்திட்டத்தின்மீது விமர்சன கணைகளை தொடர்ந்து உள்நோக்கத்தோடு தொடுத்து வந்தனர். மேலும் இத்திட்டத்தை செயலிழக்கச் செய்ய பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதை முடக்குவதற்கு நிபுணர் குழு அறிக்கையும் பெறப்பட்டுள்ளது.

இதில் பணி செய்பவர்கள் எந்த சொத்தையும் உருவாக்காமல், எந்த வேலையும் செய்யாமலே ஊதியம் பெற்று வருகிறார்கள் என்று பாஜகவினர் அவதூறு பேசி வந்தனர். இதன்மூலம் உழைக்கும் மக்களையே கேவலப்படுத்தினார்கள்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் நாடு முழுவதும் 648 மாவட்டங்களில் நிறைவேற்றப்பட்டு வருகிறது. 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, 2014 ஆம் ஆண்டு வரை 2 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசால் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகையில் 70 சதவீதம் ஊதியமாக பெற்று பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் உள்ளிட்ட பெண்கள் அதிக எண்ணிக்கையில் பயனடைந்திருப்பதே இத்திட்டத்தின் வெற்றிக்கு ஒரு சான்றாகும்.

இத்திட்டத்தின் தொடக்க காலத்தில் 13 கோடி பணி அட்டைகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது 6 கோடி பணி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு காரணம் மத்திய பாஜக அரசின் நிதி குறைப்புதான்.

2012-13 இல் ரூ.39 ஆயிரத்து 778 கோடியாக இருந்தது, 2014-15 ல் பாஜக ஆட்சியில் ரூ.31 ஆயிரத்து 272 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் நாடுமுழுவதும் ஊதிய பாக்கியே ரூ.2 ஆயிரத்து 640 கோடியாக உயர்ந்துள்ளது. ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்க வேண்டும். ஆனால் தற்போது பாஜக ஆட்சியில் ஆண்டுக்கு 37 நாட்களாக குறைந்து விட்டது.

இத்திட்டத்தில் ஊதியம் பல மாதகாலம் இழுத்தடிக்கப்பட்டு காலதாமதமாக வழங்கப்படுதால் பணியாளர்கள் யாரும் வேலைக்கு வர விருப்பம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். நிதி பற்றாக்குறை காரணமாக இத்திட்டம் பல மாவட்டங்களில் செயல்படுத்தப்படாமல் முடங்கிய நிலையில் இருந்து வருகிறது.

தமிழகத்தில் 2014-15 ஆம் ஆண்டில் மட்டும் ரூ.1,700 கோடி நிதி வெட்டு காரணமாக இத்திட்டம் செயல்படுத்த முடியாத நிலையில் உள்ளது. பல மாவட்டங்களில் ஊதிய பாக்கிதொடர்ந்து நிலுவையில் இருந்து வருகிறது. இதுகுறித்து அதிமுக ஆட்சியாளர்கள் இதுவரை மோடி ஆட்சியை எதிர்த்து குரல் கொடுக்க ஏன் தயாராக இல்லை ?

நாடு முழுவதும் கிராமப்புறங்களில் வேலையில்லா திண்டாட்டத்தை போக்கி, வாழ்வாதாரத்தை உயர்த்தி, சமூகத்தில் அமைதியை ஏற்படுத்தி சாதனை படைத்த திட்டத்திற்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதியில் 45 சதவீதம் நிதிவெட்டு ஏன் அமல்படுத்தப்பட்டு வருகிறது ?

இதற்கு பாஜக ஆட்சியாளர்கள் உரிய பதிலை தருவார்களா ? கடந்த 10 மாத ஆட்சி குறித்து சமீபத்தில் வெளிவந்த கருத்து கணிப்பு அதனுடைய மக்கள் செல்வாக்கு நாளுக்கு நாள் சரிந்து வருவதை தோலுரித்து காட்டியுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதி திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் போன்ற நாட்டு மக்களுக்கு பயன்தரும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு எதிராக செயல்பட்டு வருகிற பாஜக அரசு மானிய வெட்டு, நிதி வெட்டு என மிகப் பெரிய தாக்குதலை மக்கள் மீது தொடுத்துவருகிறது. இத்தகைய மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத போக்கை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள சக்திகளுக்கு இருக்கிறது.'' என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE