பார்வையற்றவர்களும் கட்டிடம் கட்ட நவீன கட்டுமானக் கருவி: முன்னாள் ராணுவ வீரர் கண்டுபிடிப்பு

பார்வையற்றவர்களும் செங்கல், சிமென்ட் கலவை வைத்து கட்டிடம் கட்டும் நவீன கருவியைக் கண்டுபிடித்துள்ளார், மதுரையைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மனோகரன்.

10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்த மனோகரன், 1972-ல் இந்திய கப்பல் படையில் சேர்ந்து நீர்மூழ்கி கப்பலில் பணியாற்றினார். அங்கு நேரிட்ட விபத்தில் உடல் உறுப்பு செயல்பாடுகள் பாதிக்கப்பட்டதால் 1980-ல் விருப்ப ஓய்வு பெற்றார். வேலையை இழந்த அவர், நம்பிக்கை தளராமல் வீட்டில் இருந்தபடியே சின்னச் சின்னக் கருவிகளை உருவாக்கினார்.

ஒரே நேரத்தில் ஆறு விதமான பொருட்களை தனித்தனியாக இடித் துத் தூளாக்கும் இவரது ‘சுழலும் உரல் உலக்கை’ இயந்திரத்துக்கு குடியரசுத் தலைவர் விருது கிடைத்தது. இவரது தொடர் ஆராய்ச்சியில் உருவானதுதான், பார்வையற்றவர்களும் கட்டிடம் கட்ட பயன்படும் நவீன கட்டுமானக் கருவி.

இதுகுறித்து ‘தி இந்து’-விடம் மனோகரன் கூறியதாவது:

‘‘எல்லாமே நவீனமயமாகிவிட்ட இந்தக் காலத்தில், கட்டுமானத் தொழிலில் மட்டும் இன்னமும் நாம் கொத்துக் கரண்டி, குண்டு நூல், மட்டப் பலகை உள்ளிட்ட சாதனங் களையே பல்லாண்டுகளாகப் பயன்படுத்தி வருகிறோம்.

இதனால், கட்டுமானத்தில் ஏற்படும் மேடு பள்ளங்களை சரி செய்ய, தேவைக்கு அதிகமான சிமென்ட் கலவையை அள்ளிப் பூசி விடுகின்றனர். எனவே, பொருள் மற்றும் கால விரயம் ஏற்படுவதுடன் கட்டிடத்தின் உறுதியும் இடத்துக்கு இடம் மாறுபடும்.

10-க்கு 10 அடி பரப்பளவு கொண்ட அறையின் சுவரை பூசு வதற்கு சாதாரணமாக ஒன்றரை மூட்டை சிமென்ட் பயன்படுத்து கிறார்கள். ஆனால், எனது கருவி யைப் பயன்படுத்தினால் அரை மூட்டை சிமென்ட்டே போதும்.

தமிழகத்தின் ஓராண்டுக்கான மணல் தேவை 6 மில்லியன் டன். அனைத்து இடங்களிலும் இந்தக் கருவியைப் பயன்படுத்தினால் மணல் தேவையை பாதியாகக் குறைக்க முடியும். ஒட்டுமொத்த கட்டுமானச் செலவில் 30 சத வீதத்தை மிச்சப்படுத்தலாம்.

குறிப்பாக, பார்வையற்றவரும் கட்டிடம் கட்டும் சிறப்பம்சத்துடன் இந்தக் கருவியை உருவாக்கியுள் ளேன். இதை நிரூபிப்பதற்காக, பார்வையற்ற சிலருக்கு இந்தக் கருவியைக் கொண்டு பயிற்சி அளித்து வருகிறோம். பயிற்சி காலம் முடிந்த பிறகு, எங்களிடம் பயிற்சி முடித்த பார்வையற்றவர்களைவிட நேர்த்தியாக கட்டிடம் கட்டும் கொத்தனார்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு அளிக்கவுள்ளதாக அறிவிக்கவுள்ளோம்.

இந்தக் கருவியை தயாரிக்க ரூ. 3 ஆயிரம் செலவாகிறது. அதிக எண் ணிக்கையில் தயாரிக்கும் போது செலவு குறையும். யார் வேண்டு மானாலும் இதைக் கொண்டு கட்டி டம் கட்டலாம் என்பதால் எதிர்காலத் தில் இந்தக் கருவி கட்டுமானத் தொழிலில் மிக முக்கிய இடத்தைப் பிடிக்கும்’’ என்றார் மனோகரன்.





VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE