20 தமிழர் படுகொலையில் அரசு மவுனமாக இருப்பதா? - விஜயகாந்த் கடும் கண்டனம்

By செய்திப்பிரிவு

திருப்பதி வனப் பகுதியில் 20 தமிழகத் தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசு மவுனம் காப்பது கண்டிக்கத்தக்கது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:

திருப்பதி வனப்பகுதியில் ஏப்ரல் 7-ம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்களை ஆந்திர மாநில போலீஸார் சுட்டுக் கொன்றுள்ளனர். தற்காப்புக்காக நடத்தப்பட்ட தாக்குதல் என ஆந்திர காவல்துறை கூறினாலும், இது திட்டமிட்ட படுகொலை என்பதற்கான பல ஆதாரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இதுதொடர்பாக ஆந்திர உயர் நீதிமன்றத்தில் மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்த வழக்கில், துப்பாக்கிச் சூடு நடத்திய போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய உத்தரவிடப் பட்டுள்ளது. அதன்படி, கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. தவறு செய்தவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்காமல் வெறும் கடிதம் மட்டும் எழுதிவிட்டு தமிழக அரசு மவுனம் காப்பது கடும் கண்டனத்துக்குரியது.

இறந்தவர்களில் 6 பேரின் உடலை மறு பிரேதப் பரிசோதனை செய்வது மிக முக்கியமான சாட்சியாகும். ஆனால், அதை ஒரு பொருட்டாகவே கருதாமல் தமிழக அரசு தொடர்ந்து மவுனம் சாதிக்கிறது. இப்படுகொலை குறித்த உண்மைகளை நீதிமன்றத் திலோ, சமூக ஆர்வலர்களின் உண்மையறியும் குழுவிடமோ தெரிவிக்கலாம் என நீதிமன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அதை ஏற்று தங்களுக்கு தெரிந்த உண்மைகளை பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும்.

இதுபோன்ற படுகொலைகள் இனி நடக்காமல் இருக்க பின்தங்கிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கும் திட்டங் களை அரசு வகுக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் விஜயகாந்த் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE