திமுக ஆட்சியில் உடன்குடி மின் திட்டத்துக்கு 939 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது: அமைச்சர் புகாருக்கு கருணாநிதி பதில்

உடன்குடி மின் திட்டத்துக்காக திமுக ஆட்சியில் 939 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது என்று மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு திமுக தலைவர் கருணாநிதி பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

உடன்குடி மின் திட்டத்தை நிறைவேற்றுவதில் அதிமுக ஆட்சியில் ஏன் தாமதம் என்று கேட்டால், அதற்கு நேரடியாக பதில் சொல்வதை விட்டுவிட்டு, திமுக ஆட்சி மீது அமைச்சர் குற்றச்சாட்டுகளை கூறுவது என்ன நியாயம்? இந்த திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த ஒரு வருவாய் ஆய்வாளரைக்கூட திமுக அரசு நியமிக்க வில்லை, சுற்றுச்சூழல் அனுமதி யைப் பெறவில்லை, நிதி ஆதாரத்தைத் திரட்டவில்லை என்று அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சட்டப்பேரவையில் குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக ஆட்சியில் பெல் நிறுவனமும், மின் வாரியமும் இணைந்து, உடன்குடி மின் கழகம் என்ற ஒரு புதிய அமைப்பை உருவாக்கின. இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் 112 பக்கங்களைக் கொண்ட சுற்றுச்சூழல் ஆய்வறிக்கையை 2011-ம் ஆண்டு மார்ச்சில் தந்தது.

உடன்குடி மின் திட்டத்துக்காக 939 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அண்ணா பல்கலைக் கழகம் தனது ஆய்வறிக்கையில் தெளிவாகச் சொல்லியுள்ளது. இது தொடர்பாக செய்திகளும் வெளியாகியுள்ளன. இதிலிருந்து, சட்டப்பேரவையில் உண்மைக்கு மாறான தகவல்களை மின் துறை அமைச்சர் கொடுத்திருக்கிறார் என்பது ஊர்ஜிதமாகிறது.

அடுத்ததாக, டெண்டர் கோரி யது வெளிநாட்டு நிறுவனம் என்பதால், அதன் தகுதிகளைப் பரிசீலிக்க காலதாமதமானதாக அமைச்சர் கூறியுள்ளார். ஆனால், மின் வாரியத்தின் எந்தக் கோப்புகளிலும் அப்படி குறிப்பிடப்படவில்லை என்றும் செய்தி வெளியாகியுள்ளது. இந்தப் பொய்களுக்கெல்லாம் மின் துறை அமைச்சரின் விளக்கம் என்ன?

பெல் மற்றும் சீன நிறுவனத்தின் திட்டம், விலைப் புள்ளிகளை ஆய்வு செய்த ஜெர்மனி நிறுவனம், ‘இரண்டிலும் குறைகள் உள்ளன. எனவே, அவற்றைச் சீர்செய்த பிறகு, டெண்டரை ஏற்கும் முடிவை, தமிழக அரசின் மின் வாரியமே முடிவு செய்து கொள்ளட்டும்’ என ஆலோசனை சொன்னதாக அமைச்சர் கூறினார்.

ஆனால் ‘இரு டெண்டர் களிலும் குறை உள்ளது. எனினும், சீன நிறுவனத்தின் விலைப் புள்ளியே குறைவானது. டெண்டரை வழங்குவதற்கு பெல் நிறுவனத்தைவிட சீன நிறுவனத்துக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும்’ என்று ஜெர்மனி நிறுவனம் பரிந்துரைத்ததாக செய்திகள் வெளியாகின. அமைச்சரின் இந்த வரிசையான பொய்களுக்கு அதிமுக தலைமையும், முதல்வரும் என்ன பதிலை சொல்லப் போகிறார்கள்?

இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE