தனது படைப்புகளின் வழியே முற்போக்கு சிந்தனைகளை பரப்பியவர் ஜெயகாந்தன்: நினைவஞ்சலியில் ரஷ்ய தூதர் புகழாரம்

தனது படைப்புகளின் வழியே முற்போக்கு சிந்தனைகளைப் பரப்பியவர் எழுத்தாளர் ஜெயகாந்தன் என்று ரஷ்ய தூதர் செர்கை எல்.கோட்டாவ் கூறியுள்ளார்.

இந்திய-ரஷ்ய கலாச்சார நட்புறவுக் கழகத்தின் சார்பில் மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு சென்னையில் நினைவஞ்சலிக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட ரஷ்ய நாட்டுத் தூதர் செர்கை எல்.கோட்டாவ் பேசியதாவது:

‘இந்திய-ரஷ்ய கலாச்சார நட்புறவுக் கழகம் தமிழகத்தில் தோற்றுவிக்கப்பட பெருமுயற்சி எடுத்த பெருந்தகை எழுத்தாளர் ஜெயகாந்தன். அவர் தனது எழுத்திலும் வாழ்க்கையிலும் ஒரு சமூகக் கோபத்தை பிரதிபலித்தார். அவரது படைப்புகள் சாதாரண மக்களின் வாழ்க்கையை தத்ரூபமாகப் படம் பிடித்தன. இலக்கியத்துக்கு மட்டுமல்லாது சமூகத்துக்கும் அவர் ஆற்றியுள்ள பங்களிப்பு அளப்பரியது’ என்றார்.

சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.எம்.பாஷா பேசியதாவது: ‘மறைந்தாலும், மறையாத அவருடைய படைப்புகளால் நம்மிடையே வாழ்பவர் ஜெயகாந்தன். பள்ளிப் படிப்பைக்கூட தாண்டாத அறிவுஜீவி அவர். தனது படைப்புகளுக்காக பல்வேறு விருதுகளை அவர் பெற்றிருந்தாலும் காலத்தால் அழியாத அவரது படைப்புகள்தான் அவருக்குக் கிடைத்த மிகச் சிறந்த விருதுகள். அரசியல் உலகம், திரையுலகம், எழுத்துலகம் என்று மூன்றிலும் தனது முத்திரையைப் பதித்த மகத்தான படைப்பாளி ஜெயகாந்தன்’ என்றார்.

நிகழ்ச்சியில் ‘இந்து’ என்.ராம், ‘புதிய பார்வை’ ஆசிரியர் ம.நடராசன், திராவிடர் கழகத் தலைவரும் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தருமான கி.வீரமணி, இந்திய-ரஷ்ய வர்த்தக மற்றும் கைத்தொழில் ஜெம் ஆர்.வீரமணி, ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையத்தைச் சேர்ந்த மிக்கைல் கார்படோவ், இந்திய ரஷ்ய கலாச்சார மற்றும் நட்புறவு சமூகத்தைச் சேர்ந்த பி.தங்கப்பன், தொழிலதிபர் நல்லி குப்புசாமி, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மன்னர் ஜவகர், தென்னிந்திய திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.தாணு, எடிட்டர் பி.லெனின், ஓவியர் விஸ்வம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE