கல்வி நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்: விஐடி வேந்தர் ஜி.விஸ்வநாதன் வலியுறுத்தல்

கல்வி நிறுவனங்கள் மீதான அரசின் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று விஐடி பல்கலைக் கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் கூறியதாவது:

பல்கலைக்கழக இணைப்பு, தடையில்லா சான்றிதழ் பெறுவது, உள்ளிட்ட மிக கடுமையான கண்காணிப்பு முறைகள் இந் தியாவில் உள்ளன. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளைத் தவிர வேறு எந்த நாட்டிலும் பல்கலைக்கழக இணைப்பு முறை கிடையாது. மேற்படிப்பில் முன்னோடி என்று கருதப்படும் அமெரிக்காவில் உள் ளது போன்ற மத்திய அங்கீகார முறையை இந்தியாவில் அமல் படுத்த வேண்டும். இங்கு இப்போ துள்ள அங்கீகார முறை ஊழலுக்கு வழி வகுக்கிறது. சென்னையில் ஒரு வளாகம் அமைப்பதற்கு 13 தடையில்லா சான்றிதழ்கள் பெற வேண்டியுள்ளது. கல்வி நிறுவனங் கள் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்.

பத்தாவது ஐந்தாண்டு திட்டத்தின் படி இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் 10 சதவீதம் தன்னாட்சி நிறுவனங்களாக இருக்க வேண்டும். அதாவது சுமார் 4ஆயிரம் தன்னாட்சி நிறுவனங்கள் இருந்திருக்க வேண்டும். ஆனால், 400 நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. மத்திய அரசு வகுத்துக் கொண்டிருக்கும் புதிய கல்விக் கொள்கையில் இந்த மாற்றங்கள் இருக்கும் என நம்புகிறேன்.

விஐடி பல்கலைக்கழகத்தில் உள்ள 4000 இடங்களுக்கு இந்த ஆண்டு 2 லட்சத்து 2 ஆயிரத்து 406 விண்ணப்பங்கள் இதுவரை வந்துள்ளன. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்திலிருந்து 27ஆயிரத்து 600 விண்ணப்பங்கள் வந்துள்ளன. நுழைவுத் தேர்வு கணினி வழியில் இந்தியாவில் 112 நகரங்களிலும் துபாய் மற்றும் குவைத் நாடுகளிலும் ஏப்ரல் 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விஐடி பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர் சேகர் விஸ்வநாதன் உடனிருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE