20 தமிழர்கள் உயிரை துச்சமென கருதுகிறாரா ஜெ.?- ஸ்டாலின்

செம்மரக் கடத்தல் தொடர்பாக கொல்லப்பட்ட தமிழக தொழிலாளர்களின் இன்னுயிர் பற்றி அதிமுக அரசுக்கு அக்கறை ஏதும் இல்லை என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், ஆந்திர காவல் துறையின் துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி ஜெயலலிதா வெளியிட்டுள்ள மிக மென்மையான அறிக்கை, 20 தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை துச்சமெனக் கருதுவது போல் அமைந்திருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

இது குறித்து இன்று முகநூல் பக்கத்தில் ஸ்டாலின் எழுதிய பதிவில், '' தமிழக தொழிலாளர்களை ஆந்திர மாநில காவல்துறையின் சிறப்பு அதிரடிப் படையினர் சுட்டுக் கொன்ற சம்பவம் இரு மாநிலங்கள் தொடர்புடையது என்று நீதிபதி கல்யாண் சிங் குப்தா கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, செம்மர கடத்தல் கும்பலை இன்னும் நெருங்க முடியவில்லை என்பதையும் கருத்தில் கொண்டு இந்த என்கவுன்டர் குறித்து நியாயமான, நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும். நீண்ட கால சதித் திட்டத்தின் ஓர் அங்கமாக இந்த செம்மரக் கடத்தல் கும்பல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

குறிப்பாக, அதிமுகவுக்கு நெருங்கிய ஃபர்னிச்சர் டீலர் ஒருவர் கடந்த அக்டோபர் 2014-ல், செம்மரக் கடத்தல் தொடர்பாக நடைபெற்ற மத்திய அரசின் வருவாய் புலனாய்வுத் துறை ரெய்டுக்குப் பயந்து தற்கொலை செய்து கொண்டது இங்கே கவனிக்கத்தக்கது.

ஆந்திர காவல் துறையின் துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள மிக மென்மையான அறிக்கை 20 தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை துச்சமெனக் கருதுவது போல் அமைந்திருக்கிறது. தற்காப்பிற்காகச் சுட்டோம் என்று ஆந்திர மாநில காவல்துறையின் வாதத்தை யாரும் ஏற்றுக் கொள்ள முன் வராத நிலையில், கொல்லப்பட்ட தமிழர்களின் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்யக் கூட தமிழக அரசு தானாக முயற்சிக்கவில்லை என்பது மிகுந்த வருத்தமளிக்கிறது.

தமிழக தொழிலாளர்களின் இன்னுயிர் பற்றி அதிமுக அரசுக்கு அக்கறை ஏதும் இல்லை என்பதைத்தான் இந்தச் செயல் உணர்த்துகிறது. இறுதியாக தற்போது ஆந்திர மாநில உயர்நீதிமன்றம்தான் நீதி வழங்கியிருக்கிறது. தமிழகத் தொழிலாளர்கள் மீதான போலீஸ் என்கவுன்டர் குறித்து கொலை வழக்குப் பதிவு செய்ய உத்திரவிட்டிருக்கிறது.

பதவியிலிருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் இந்த என்கவுன்டர் பற்றி முறையான விசாரணை நடத்த வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையை மீண்டும் ஒரு முறை வலியுறுத்துகிறேன்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE