ஸ்டேஷனரி பொருட்கள் விற்பனை மூலம் பொதுமக்களை கவரும் முயற்சியில் சென்னை பொது அஞ்சலகம்

சென்னை பொது அஞ்சலகத்தில் காகிதம், எழுதுபொருட்கள் போன்ற ஸ்டேஷனரி பொருட்களை விற்பனை செய்யும் திட்டத்துக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

கடித போக்குவரத்து, மணி ஆர்டர், போன்ற வழக்கமான சேவைகளைத் தாண்டி சமீப காலமாக அஞ்சல்துறை சார்பில் பல புதிய சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னையில் அஞ்சலக ஆம்புலன்ஸ் சேவை, ஆன்லைனில் முன்பதிவு செய்து வாங்கப்படும் பொருட்களை அஞ்சலகங்கள் மூலம் விநியோகிப்பது போன்ற சேவைகள் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த வரிசையில் இந்தியாவின் மிகப்பழமையான அஞ்சலகங்களில் ஒன்றான சென்னை பொது அஞ்சல் நிலையத்தில் பேனா, பென்சில், காகிதம், நோட்டுகள் போன்ற ஸ்டேஷனரி பொருட்களின் விற்பனை கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்துக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை நகர மண்டல அஞ்சல்துறை அதிகாரி மெர்வின் அலக்சாண்டர் ‘தி இந்து’ விடம் கூறியதாவது:

அஞ்சலக துறைசார்ந்த சேவைகள் நீங்கலாக பொதுமக்களை கவருவதற் காக சில புதிய சேவைகள் செயல் படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அஞ்சலகங்களில் அஞ்சலக ஊழியர்களைக் கொண்டு விற்பனை செய்கிற ‘போஸ்ட் ஷாப்பி’ எனப்படும் எழுதுபொருட்கள் விற்பனை மையத்தை தொடங்கியுள்ளோம். இந்த மையத்தில் பேனா, பென்சில், பசை, அட்டைகள், வண்ணக் காகிதங்கள் என பள்ளி, கல்லூரி மாணவர்கள் விரும்புகிற அனைத்து பொருட்களையும் விற்பனை செய்கிறோம். இதற்கு பொதுமக்கள் மத்தியில் குறிப்பாக பள்ளி மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE