20 தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு கண்டனம்: தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணி செல்ல முயன்ற 200 பேர் கைது

ஆந்திர மாநிலத்தில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணி செல்ல முயன்ற 200 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பதி அருகே வனப்பகுதியில் கடந்த 7-ம் தேதி செம்மரம் வெட்ட வந்ததாகக் கூறி தமிழக கூலித் தொழிலாளர்கள் 20 பேரை ஆந்திர போலீஸார் சுட்டுக் கொன்றனர். இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆந்திர மாநில போலீஸாரைக் கண்டித்து பல்வேறு போராட்டங்களும் நடந்துவருகின்றன.

திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்நாடு மக்கள் கட்சி, தமிழ் தேசிய விடுதலை இயக்கம், இளந்தமிழகம் உட்பட பல அமைப்புகள் தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணியாக செல்லப்போவதாக அறிவித்திருந்தன. இதற்காக இன்று காலை அண்ணா சாலை சிம்சன் சிக்னல் அருகே உள்ள பெரியார் சிலை அருகில் திரண்டனர்.

ஆந்திர அரசுக்கு எதிராகவும், தமிழர்களை சுட்டுக் கொன்ற போலீஸாரை கைது செய்ய வேண்டும் என்றும் கோஷமிட்டனர். பின்னர் அங்கிருந்து தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

திராவிடர் விடுதலைக் கழகத்தின் கொளத்தூர் மணி, தமிழ்நாடு மக்கள் கட்சியைச் சேர்ந்த பாண்டியன், தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் தியாகு, இளந்தமிழகம் செந்தில் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

ஆர்ப்பாட்டம், மறியல்

அதேபோல 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து மனித உரிமை மக்கள் கூட்டமைப்பு சார்பில் அம்பத்தூர் ஓ.டி. பேருந்து நிலையத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் தேமுதிக, பாமக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் உட்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் திடீரென மறியல் செய்ய முயன்றனர். அதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

இரு சம்பவத்திலும் கைது செய்யப்பட்டவர்கள், அந்தந்த பகுதியில் உள்ள திருமண மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.



VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE