நாடு முழுவதும் ஆசிரியர் கல்வி படிப்புக்கு புதிய ஒழுங்குமுறைகள் அமல்: என்சிடிஇ தலைவர் தகவல்

ஆசிரியர் கல்வி படிப்புக்கான புதிய ஒழுங்குமுறைகள் வரும் ஜூலை முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்று என்சிடிஇ தலைவர் சந்தோஷ் பாண்டா திட்டவட்டமாக கூறினார். இதைத்தொடர்ந்து, பிஎட், எம்எட் படிப்பு காலம் ஓராண்டில் இருந்து 2 ஆண்டுகளாக அதிகரிக்கப்படும்.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சார்பில் “பல்கலைக்கழகங்கள், தொழில்நிறுவனங்கள், சமுதாயம் இடையே அறிவு பரிமாற்றம்” தொடர்பான 3 நாள் சர்வதேச கருத்தரங்கம் சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரியில் இன்று தொடங்கியது. இந்த கருத்தரங்கை தமிழக அரசின் உயர் கல்வித்துறை செயலர் அபூர்வா தொடங்கிவைத்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது-

தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னணியில் திகழ்கிறது. இந்தியாவிலேயே உயர்கல்வி செல்வோரின் எண்ணிக்கை தமிழகத்தில்தான் அதிகம். ஆசிரியர்கள் மாணவர்களின் விஞ்ஞான ஆர்வத்தை தூண்டுவதுடன் சிந்திக்கும் ஆற்றலையும் மேம்படுத்த வேண்டும். அதற்கான முழு சுதந்திரமும் மாணவர்களுக்கு வழங்கப்படவேண்டும்

இவ்வாறு அபூர்வா கூறினார்.

சந்தோஷ் பாண்டா பேசும்போது கூறியது:-

ஆசிரியர் பயிற்சி கல்வி தொடர்பான புதிய ஒழுங்குமுறை விதிகளை வரும் ஜூலை முதல் நடைமுறைப்படுத்தும் பணியில் என்சிடிஇ ஈடுபட்டுள்ளது. (புதிய ஒழுங்குமுறையின்படி, பி.எட், எம்எட். படிப்பு காலம் ஓராண்டில் இருந்து 2 ஆண்டுகளாக உயர்த்தப்படும்). இப்புதிய ஒழுங்குமுறைகளை அமல்படுத்தும்போது பிரச்சினைகள் எழலாம்.

தமிழகத்தில் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் புற்றீசல்கள் போல் வளர்ந்துள்ளன. பணம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பாக கல்வி நிறுவனங்கள் உருவாகியுள்ளன. பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால் அதற்கு ஆசிரியர் கல்வி பயிற்சி தொடங்குவதை விட்டு பணத்தை இதர வழிகளில் முதலீடு செய்யுங்கள்.

ஆசிரியர் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் தாங்கள் வரையறை செய்துள்ள தகுதிகளுடன் இருக்கும் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட என்சிடிஇ தயாராக உள்ளது. ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் தேசிய தர மதிப்பீட்டு கவுன்சில் (நாக்) அங்கீகாரம் பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பாண்டா கூறினார்.

முன்னதாக, துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் வரவேற்று கருத்தரங்கம் குறித்து அறிமுகவுரை ஆற்றினார். பதிவாளர் எஸ்.கலைச்செல்வன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி எம்.மணிவண்ணன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.





VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE