கட்டுப்பாட்டை இழந்து ஓடிய ஆட்டோ பஸ் மீது மோதி நின்றது: கத்தி, அரிவாளுடன் சுற்றியவர்கள் சிக்கினர்

By செய்திப்பிரிவு

திருவொற்றியூரில் கட்டுப்பாட்டை இழந்து ஓடி பஸ்ஸில் மோதிய ஆட்டோவில் இருந்து கத்தி, அரிவாள் ஆகியவை கீழே விழுந்தன. எனவே ஆட்டோவில் இருந்தவர்களி டம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் ராஜா கடை பஜார் பகுதியில் வேகமாக வந்த ஒரு ஆட்டோ, ஒரு சைக்கிள், சாலை ஓர கடைகள் மற்றும் நடந்து சென்ற ஒருவர் மீது மோதியும் வேகம் அடங்காமல் சென்று, 56சி மாநகர பஸ் மீது மோதி நின்றது. இதில் ஆட்டோ சேதமடைந்து கவிழ்ந்தது. அதில் இருந்து கத்தி, அரிவாள் ஆகியவை வெளியே வந்து விழுந்தன. இதைப் பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். நசுங்கிய ஆட்டோவுக்குள் இருந்த 3 பேர் வெளியே வர முடியாமல் தவித்தனர்.

பொதுமக்களின் உதவியுடன் மூவரை யும் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனை யில் போலீஸார் சேர்த்தனர்.

பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திருவொற்றி யூர் கரிமேடு பகுதியை சேர்ந்த பாலாஜி (36), தண்டையார்பேட்டையை சேர்ந்த வேலு, விஷ்ணு என்பது தெரிந்தது.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "புதுவண்ணாரப்பேட்டை இளையமுதலி தெருவில் சாலையில் சென்ற ஒருவரை பாலாஜி, வேலு, விஷ்ணு ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். அப்போது அங்கு வந்த போலீஸாரிடம் இருந்து தப்பிப்பதற்காக 3 பேரும் ஆட்டோவில் வேகமாக வந்து விபத்தை ஏற்படுத்தியுள்ளனர். கொலை செய்யும் நோக்கில் சென்றார்களா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE