ஆந்திராவில் கொல்லப்பட்ட 20 பேருடன் சென்ற தமிழக கூலித் தொழிலாளர்கள் 40 பேரின் கதி என்ன?- தேசிய மனித உரிமை ஆணையம் விசாரிக்க உத்தரவு

ஆந்திர மாநிலம் திருப்பதி வனப் பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட 20 பேருடன் சென்ற 40 கூலித் தொழிலாளர்களை கண்டுபிடிக் கவும், கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க ஆந்திர அரசுக்கு உத்தரவிடவும் கோரிய மனு மீது, தேசிய மனித உரிமை ஆணையம் விசாரிக்க, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

மதுரை அல்அமீன் நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.மகா ராஜன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்தமனு:

ஆந்திர மாநிலம், திருப்பதி அருகே வனப்பகுதியில் தமிழக கூலித் தொழிலாளர்கள் 20 பேரை, ஆந்திர மாநில அதிரடிப்படையினர் வலுக்கட்டாயமாக வனப் பகுதிக்கு இழுத்துச் சென்று சித்திரவதை செய்து சுட்டுக் கொலை செய்துள்ளனர்.

ஆந்திராவுக்கு திருவண்ணா மலை, வேலூர், தருமபுரி, விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் 60 பேரை, கட்டுமானம், குவாரிப் பணிக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அவர்களில் 40 பேரின் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை.

அப்பாவி கூலித் தொழிலாளர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது தொடர்பாகவும், செம்மரக் கடத்தல் தொடர்பாகவும் மத்திய அரசும், தமிழகம் மற்றும் ஆந்திர மாநில அரசுகளும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். மேலும், இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க ஆந்திர அரசுக்கும், கூலித் தொழிலாளர்கள் 40 பேரை கண்டுபிடித்து ஆஜர்படுத்தவும் உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், ஜி.சொக்கலிங்கம் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ்குமார் வாதிட்டார். மத்திய அரசு சார்பில் உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ஆர்.சுவாமிநாதன் வாதிடும்போது, இந்த சம்பவம் ஆந்திராவில் நடைபெற்றுள்ளது. அதுகுறித்து விசாரிக்க இங்கு மனுதாக்கல் செய்ய முடியாது. தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம், ஆந்திர உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. தேசிய மனித உரிமை ஆணையமும் விசாரித்து வருகிறது. எனவே, இந்த நீதிமன்றத்தில் தனியாக ஒரு மனுவை விசாரிக்க வேண்டியதில்லை என்றார்.

இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், மனுதாரர் ஏற்கெனவே மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள மனுவின் அடிப்படையில் தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE