தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்க வீரப்பன் கூட்டாளிக்கு 15 நாள் பரோல்

By செய்திப்பிரிவு

தனது தாயாரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள வீரப்பனின் கூட்டாளி துப்பாக்கி சித்தன், 15 நாள் பரோலில் மைசூர் சிறையில் இருந்து தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

சந்தன கடத்தல் வீரப்பனின் முக்கிய கூட்டாளியாக இருந்தவர் துப்பாக்கி சித்தன் (55). தமிழக காவல்துறை அதிகாரிகள் வந்த வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தியது உட்பட தமிழகம் மற்றும் கர்நாடக மாநில காவல்துறைகளில் இவர்மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருந்தது.

இந்நிலையில், தேடப்படும் நபராக துப்பாக்கி சித்தனை இருமாநில போலீஸாரும் அறிவித்து தேடிவந்த நிலையில், அதிரடிப்படை போலீஸாரிடம் துப்பாக்கி சித்தன் சரண் அடைந்தார்.

கர்நாடக மாநிலத்தில் நடந்த தாக்குதல் தொடர்பான வழக்கில் சிறைதண்டனை பெற்ற துப்பாக்கி சித்தன், மைசூர் சிறையில் தண்டனை கைதியாக உள்ளார். துப்பாக்கி சித்தனின் சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகேயுள்ள கல்மண்டிபுரம். இங்கு வசித்த அவரது தாயார் சில தினங்களுக்கு முன் உயிரிழந்தார்.

தாயாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள துப்பாக்கி சித்தன், மைசூர் சிறைநிர்வாகத்திடம் பரோல் அனுமதி கோரியிருந்தார். அவரது நன்னடத்தையின் அடிப்படையில், 15 நாட்கள் பரோலில் செல்லவும், தினசரி தாளவாடி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் சிறை நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது.

இதைத் தொடர்ந்து தனது தாயின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள கடந்த 5-ம் தேதி போலீஸ் பாதுகாப்புடன் பரோலில் வந்த சித்தன், இறுதிச் சடங்கில் பங்கேற்றார்.

தற்போது தினமும் தாள வாடி காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE