20 தமிழர்கள் படுகொலை: ஏப்.28-ல் ஆளுநர் மாளிகை நோக்கி மதிமுக, வி.சி. உள்ளிட்ட கட்சிகள் பேரணி

20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக் கோரி அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் வரும் 28-ம் தேதி பேரணியாக சென்று தமிழக ஆளுநரிடம் மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட தமிழர்கள் குறித்து விவாதிக்க அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் வைகோ, திருமாவளவன், வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ''கொல்லப்பட்ட தமிழர்களின் உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். ஆந்திர காவல்துறையில் நீதி கிடைக்காது. எனவே, இது குறித்து முழு உண்மை வெளிவர சிபிஐ விசாரணை வேண்டும்.

ஏறத்தாழ 3000 தமிழர்கள் ஆந்திராவில் உள்ள சிறைகளில் அடைபட்டிருக்கிறார்கள். இதில் எத்தனை பேர் இடைப்பட்ட காலத்தில் கொல்லப்பட்டார்கள் என தெரியாது. இந்த உண்மையை வெளியே கொண்டுவர உச்ச நீதிமன்ர நீதிபதியை வைத்து நீதிவிசாரணை செய்ய வேண்டும்''என்று வைகோ கூறினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசுகையில் ''செம்மரக் கட்டைகளைக் கடத்துகிற கடத்தல்காரர்கள் யாரும் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் அல்ல. கடத்தல் தொழிலில் ஈடுபடக்கூடியவர்கள் ஆந்திர மாநிலத்தைச் சார்ந்தவர்கள்தான். அவர்கள் பின்னணி வெளிச்சத்துக்கு வரவேண்டும்'' என்றார் திருமாவளவன்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பேசுகையில், ''தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு வரும் 28-ம் தேதி சென்னை பனகல் மாளிகையில் இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடைபெறும். ஊர்வலத்தின் முடிவில் ஆளுநரை சந்தித்து மனு அளிக்கப்படும்'' என்று வேல்முருகன் பேசினார்.



VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE