சவால்களை எதிர்கொள்ள ராணுவ தளபதி அறிவுறுத்தல்

உள் நாட்டு, எல்லைப் பாதுகாப்பு மற்றும் ஐக்கிய நாடு அமைதி திட்டங்கள் உள்ளிட்ட இந்திய ராணுவத்தின் முன்னுள்ள சவால்களை எதிர்கொள்ளும் வகையில், ராணுவ வீரர்கள் சிறப்பாக பணிபுரிந்து நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டுமென, ராணுவ தலைமைத் தளபதி தல்பீர் சிங் சுஹா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் குன்னூரை அடுத்த வெலிங்டன் ராணுவ மையத்தில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சார்பில், நாட்டுக்கு சிறப்பாக சேவை செய்ததற்காக வரலாற்று சிறப்பு மிக்க இந்திய ராணுவத்தின் கொடி வழங்கும் நிகழ்ச்சி, ஸ்ரீ நாகேஷ் பேரக்சில் நேற்று நடைபெற்றது.

கொடிகள் முன்பு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மத போதகர்கள் பிரார்த்தனை செய்த பின்னர், 20, 21-வது பட்டாலியன் களுக்கு ராணுவ தளபதி தல்பீர் சிங் சுஹா கொடிகளை வழங்கினார். இதையொட்டி, அஞ்சல் துறை சார்பில் சிறப்பு தபால் உறையை அவர் வெளியிட்டார்.

இதைத் தொடர்ந்து, வெலிங்டன் ராணுவ மையத் தலைவர் பிரிகேடியர் எஸ்.சுரேஷ்குமார் தலைமையில் நடந்த ராணுவ அணிவகுப்பு மரியாதையை, தலைமை தளபதி ஏற்றுக்கொண்டார். மெட்ராஸ் ரெஜிமெண்ட் லெப்டினென்ட் ஜெனரல் எஸ்.நரசிம்மன், உயர் அதிகாரிகள், இளநிலை அதிகாரிகள், வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பங்கேற்றனர்.

முன்னதாக, உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு, போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE