தமிழகத்தில் வரும் ஜூன் 1-ம் தேதி முதல் மின் வெட்டு அறவே நீக்கப்படுகிறது. இதன்மூலம் மின்வெட்டே இல்லாத மாநிலம் என்ற நிலையை தமிழகம் எட்டியுள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக மின் நிலைமை குறித்து எனது தலைமையில் தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் ஆர்.விஸ்வநாதன், ஆர்.வைத்திலிங்கம், எடப்பாடி கே.பழனிச்சாமி, எஸ்.பி.வேலுமணி, தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், நிதித்துறை முதன்மைச் செயலாளர் கே.சண்முகம், மின் வாரியத் தலைவர் கு.ஞானதேசிகன், உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
3 ஆண்டில் 2,500 மெ.வா.
பொருளாதார வளர்ச்சிக்கும், தொழில்துறை வளர்ச்சிக்கும் இன்றியமையாததாக விளங்குவது மின்சாரமே. 2011-ல் மூன்றாவது முறையாக முதல்வராக நான் பொறுப்பேற்றபோது, தமிழகத்தின் மின் தேவை 12 ஆயிரம் மெகாவாட்டாக இருந்தது. ஆனால், கிடைத்த மின்சாரமோ வெறும் 8 ஆயிரம் மெகாவாட்தான். பற்றாக்குறை 4 ஆயிரம் மெகாவாட்டாக இருந்தது. மேலும், தமிழ்நாடு மின்சார வாரியமும் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்தது.
இவற்றையெல்லாம் சீர் செய்வதற்கான பகீரத முயற்சிகளை எனது தலைமையிலான அரசு எடுத்ததன் விளைவாக, கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 2,500 மெகாவாட் அளவுக்கு புதிய மின் உற்பத்தி நிறுவுதிறன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர, 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய நடுத்தரகால ஒப்பந்தங்கள் போடப்பட்டு, அதுவும் பெறப்பட்டு வருகிறது. இது தவிர, 3,300 மெகாவாட் மின்சாரத்தை நீண்ட கால அடிப்படையில் வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இந்த மின்சாரம், வரும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து படிப்படியாக பெறப்படும்.
புதிய மின் உற்பத்தி நிலை யங்கள் மூலமும், கொள்முதல் செய்யப்படும் மின்சாரத்தின் மூலமும் நமக்குத் தேவையான மின்சாரம் தற்போது கிடைக்கிறது. எனவே, கடந்த 5 நாட்களாக தமிழகத்தில் மின் தடை என்பதே இல்லாத நிலை உருவாகியுள்ளது.
காற்றாலை மூலம் மின்சாரம்
வரும் ஜூன் முதல் காற்றாலை மூலம் அதிக அளவில் மின்சாரம் கிடைக்கும். காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதையும் பயன்படுத்த வேண்டும் என்று மின் வாரியத்தை அறிவுறுத்தியுள்ளேன். ஜூன் முதல் கிடைக்கும் காற்றாலை மின்சாரத்தையும் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் இதுவரை நடைமுறையில் உள்ள மின் கட்டுப்பாட்டு முறைகள் அனைத்தையும் வரும் ஜூன் 1-ம் தேதி முதல் அறவே நீக்க உத்தரவிட்டுள்ளேன்.
இதன்படி, தற்போது உயர் மின்னழுத்த தொழில் மற்றும் வணிக மின் நுகர்வோர்களுக்கு மாலை 6 முதல் இரவு 10 மணி வரை நடைமுறையில் உள்ள 90 சதவீத மின் கட்டுப்பாடு 1-ம் தேதி முதல் நீக்கப்படும். இதேபோன்று, உயர் மின்னழுத்த தொழில் மற்றும் வணிக மின் நுகர்வோர்களுக்கு மற்ற நேரங்களில் தற்போது நடைமுறையில் உள்ள 20 சதவீத மின் கட்டுப்பாடும் நீக்கப்படும்.
தொழில் வளம் பெருகும்
இதன் மூலம் கடந்த 2008 முதல் முந்தைய திமுக ஆட்சியி னரால் அமல்படுத்தப்பட்ட மின் கட்டுப்பாடுகள் அனைத்தும் முற்றிலும் நீக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நடவடிக் கையின் காரணமாக தமிழகத்தில் தொழில்வளம் மேலும் பெருகவும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவும் வழிவகை ஏற்படும்.
நான் ஏற்கெனவே உறுதி அளித்தபடி, மின்வெட்டே இல்லாத மாநிலம் என்ற நிலைக்கு தமிழகத்தை மூன்றே ஆண்டுகளில் கொண்டு வந்ததில் பெருமிதம் அடைகிறேன்.
இவ்வாறு அறிக்கையில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago