அண்ணா நூற்றாண்டு நூலகத்தை சீரமைக்கக் கோரி திமுக ஆர்ப்பாட்டம்: 1,200 பேர் கைது

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை சீரமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் 1,200 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த திமுக ஆட்சியில் சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் 8 மாடிகள் கொண்ட அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டது. பராமரிப்பின்றி மோசமான நிலையில் உள்ள இந்த நூலகத்தை சீரமைக்க வலியுறுத்தி சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மா.சுப்பிரமணியன் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திராவிட இயக்க தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன், முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் மற்றும் திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக மா. சுப்பிரமணியன் உள்ளிட்ட 1,200 பேர் கைது செய்யப்பட்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன், “திமுக ஆட்சியில் கட்டப்பட்டது என்ற ஒரே காரணத்துக்காக அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பராமரிக்காமல் மோசமான நிலையில் வைத்துள்ளனர். ஆட்சி மாறியதிலிருந்து புதிய புத்தகங்கள் வாங்கப்படவில்லை. அங்குள்ள அரங்குகளை வாடகைக்கு விடும் அவலமும் நடக்கிறது. உடனடியாக நூலகத்தை சீரமைத்து உரிய முறையில் பராமரிக்க வேண்டும். அதுவரை திமுக தொடர்ந்து போராடும்” என்றார்.





VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE