குறைந்தபட்ச ஊதியமாக ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும்: துப்புரவு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை

துப்புரவு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 15 ஆயிரம் வழங்கவேண்டும் என்று கோரி துப்புரவு ஊழியர் சங்கங்கள் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தின.

ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சம்மேளனம், ஊராட்சி மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இயக்குபவர் மற்றும் துப்புரவு பணியாளர் சங்கம், தமிழ்நாடு சுகாதார பணியாளர் முன்னேற்றச் சங்கம் ஆகிய சங்கங்களைச் சேர்ந்தவர்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இதில் கலந்து கொண்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சம்மேளனத்தின் மாநில பொதுச் செயலாளர் கே.ஆர்.கணேசன் கூறியதாவது:

மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகளை இயக்குபவர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் பகுதி நேர ஊழியர்களாகத்தான் நியமிக்கப்படுகிறார்கள். மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகளை இயக்குபவர்கள் குழாய்களை பழுது பார்க்கின்றனர், பகலில் மின் தடை ஏற்படும்போது, இரவு முழுவதும் விழித்திருந்து தண்ணீர் வால்வுகளை திறந்துவிடுகின்றனர். துப்புரவு ஊழியர்களுக்கு குப்பை வண்டி, கை கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்கள் தரப்படுவதில்லை. மோட்டார் இயக்குபவர்களுக்கு மாதம் சுமார் ரூ.2500 மற்றும் துப்புரவு ஊழியர்களுக்கு சுமார் ரூ. 3000 தரப்படுகிறது.

மோட்டார் இயக்குபவர்கள் மற்றும் துப்புரவு ஊழியர்களை நிரந்தரப்படுத்தி அனைவருக்கும் ரூ.15ஆயிரம் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். அவர்களுக்கு தரப்படும் ஊதியத்தை கிராம நிதி ஆதாரங்களிலிருந்து தராமல் பஞ்சாயத்துகளுக்கு அரசு ஒதுக்கும் நிதியிலிருந்து கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சி மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இயக்குபவர் மற்றும் துப்புரவு பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சி.ஜோதிமணி, தமிழ்நாடு சுகாதார பணியாளர் முன்னேற்றச் சங்கத்தின் மாநில அமைப்பாளர் ஏ.கொண்டவெள்ளை, மற்றும் பணியாளர்கள் பலர் பங்கேற்றனர்.





VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE